செய்திகள்
வீரப்ப மொய்லி

காங்கிரஸ் கட்சியை சீரமைத்தால் மோடியை வீழ்த்தி விடலாம்: வீரப்ப மொய்லி

Published On 2021-06-11 01:58 GMT   |   Update On 2021-06-11 01:58 GMT
குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். திறமையான நபர்களை உரிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.
புதுடெல்லி :

வீரப்ப மொய்லி தனது பேட்டியில் கூறியதாவது:-

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்பட்ட நோக்கங்கள்தான் முக்கியம். அவர் மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. அவரை உத்தரபிரதேசத்தின் இளம் தலைவராக முன்னிறுத்தினோம். ஆனால், அவர் அங்கு எந்த முத்திரையும் பதிக்கவில்லை. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

அவரை மேற்கு வங்காளத்தின் பொறுப்பாளராக நியமித்தோம். ஆனால், அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்  பூஜ்யம் வாங்கியது. அவர் திறமையற்றவர் என்று நிரூபணமாகி விட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து,
காங்கிரசுக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று சொன்னேன். அதை செய்யாமல் தாமதித்து விட்டோம். தள்ளிப்போடாமல், இப்போதே பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். திறமையான நபர்களை உரிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.



பிரதமர் மோடி ஆடும் போட்டி அரசியலை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி ஒன்றும் தோற்கடிக்க முடியாதவர் அல்ல. கட்சியை சீரமைத்து வழிக்கு கொண்டு வந்தால், மோடியை வீழ்த்தி விடலாம்.

அடுத்த ஆண்டு 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்து, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வந்து விடும். எனவே, 7 மாநில தேர்தல்களில் நன்றாக செயல்படாவிட்டால், பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது சிக்கலாகி விடும்.

முக்கிய பொறுப்புகளுக்கு தகுதியற்றவர்களை நியமிக்கக்கூடாது. ஒருவரை நியமிக்கும்போது, அவரது கடந்த காலம், கொள்கை உறுதிப்பாடு, திறமை, அனுபவம் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். இளைஞர்களை முக்கிய பதவிகளில் அமர்த்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்தாலும், தலைமை பதவிக்கு காலியிடம் இல்லை. அவர் கட்சியில் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News