ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன்

பாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்

Published On 2019-10-18 06:18 GMT   |   Update On 2019-10-18 06:18 GMT
குதிரை மீது பகவதி அம்மன் அமர்ந்து பாணாசுரனை துரத்தி அவனை அழிக்கும் நிகழ்வே பரிவேட்டை திருவிழா. பாணாசுரனை பகவதி அம்மன் வதம் செய்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முக்கடலும் முத்தமிட்டு வெண்சாமரம் வீசி பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் இன்புறச் செய்யும் இலக்கிய சிறப்பும் காப்பிய சிறப்பும் பெற்றது கன்னியாகுமரி.

இங்கு அருளாட்சி புரியும் பகவதி அம்மன், மக்களையும், தேவர்களையும் துன்புறுத்திய பாணாசுரனை அழித்தாள். குதிரை மீது பகவதி அம்மன் அமர்ந்து பாணாசுரனை துரத்தி அவனை அழிக்கும் நிகழ்வே பரிவேட்டை திருவிழா. நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாளில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரதேசம் ‘கைய நாடு’ என்று அழைக்கப்பட்டது. இந்த நாட்டை கசிய பிரஜாபதி என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனுக்கு பல மகன்கள் உண்டு. அவர்களில் பாணாசுரன் என்பவன் அண்ட சராசரத்தையும் நடுநடுங்க செய்தான். இரக்கமே இல்லாத கொடுங்கோலன்! அவன் எல்லோரையும் ஆட்டிப்படைத் தான். அவனது செய்கையால் அறம் அழிந்தது, ஆக்கம் சிதைந்தது. பாணாசுரன் இவ்வளவு கொடியவனாக இருந்தாலும் கடுமையான தவம் செய்து பிரம்மாவிடம் அழியாத வரம் ஒன்று பெற்றான். யாராலும் தனக்கு அழிவு - சாவு வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டான். ஆனால் விதி ‘கன்னி’ வடிவத்தில் வந்து அவன் வாழ்க்கையோடு விளையாடியது.

ஆம். கன்னியால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தை கேட்க மறந்துவிட்டான். இந்த வரம்தான் பகவதி அம்மன் அவதரிக்க காரணம் ஆனது. இந்த சூழ்நிலையில் பாணாசுரன் கொடுமை தாங்கமுடியாமல் தேவர்கள், முனிவர்கள் அடைக்கலம் கேட்டு திருமாலிடம் ஓடினார்கள். பாணா சுரனை அழிக்க உபாயம் கேட்டார்கள்.
பாணா சுரனை அழிக்க சக்தியால் தான் முடியும், அந்த சக்தியை பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும், அந்த யாகத்தில் ஒளி வடிவில் ஒரு பெண் தோன்றுவாள், அவளே சக்தியாக இருப்பாள் என்று திருமால் கூறுகிறார். அதன்படி யாகம் நடக்க பராசக்தி அவதரித்தார். அந்த சக்திதான் தேவி பகவதி அம்மன்.

பாணாசுரனை அழிக்க அவதரித்த பகவதி அம்மனை சிவபெருமான் மணம் முடிக்க தூதுவிட்டார். ‘கன்னி’யாக இருந்தால்தான் பாணாசுரனை அழிக்க முடியும் என்பதால் தேவி பகவதி அம்மனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போனது. ஆனால் சிவபெருமான் தூதை சமாளிக்க பகவதி அம்மன் நூதன தந்திரம் ஒன்றை கையாண்டார். அதன்படி, ‘கண்ணில்லாத தேங்காய், காம்பற்ற வெற்றிலை, கணு இல்லாத கரும்பு ஆகிய மூன்றையும் கொண்டு வரவேண்டும், பொழுது புலர்வதற்குள் திருமணம் நடக்க வேண்டும், அப்போதுதான் திருமணத்திற்கு சம்மதிப்பேன்’ என்று நிபந்தனை போடுகிறார்.

இந்த நிபந்தனையின்படி சிவபெருமான் எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு பகவதி அம்மனை மணம் முடிக்க புறப்பட்டார். இதை அறிந்த நாரத மாமுனிவர் பதறினார். ‘அய்யோ... இந்த திருமணம் நடந்துவிட்டால் பாணாசுரனை அழிக்க முடியாதே’ என்று தவித்தார். துடியாய் துடித்தார்.

அந்த தவிப்பிலும் துடிப்பிலும் இந்த திருமணத்தை நிறுத்த அவருக்கு ஒரு வழி பிறந்தது. அதன்படி சுசீந்திரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழுக்கம்பாறை என்ற இடத்தில் நாரதர் சேவல் வேடத்தில் நின்றுகொண்டார். சிவபெருமான் அந்த இடத்திற்கு வந்ததும் சேவல் வேடத்தில் இருந்த நாரதர் சேவல்போல கூவினார். சேவல் கூவிய சத்தம் கேட்டதும் சிவபெருமான் பொழுது விடிந்துவிட்டதே என்று கருதி பகவதி அம்மனை திருமணம் முடிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் சுசீந்திரம் திரும்பிவிடுகிறார். இதற்கிடையில் அருள்வடிவான பகவதி அம்மனை மணம்முடிக்க பாணாசுரன் திட்டமிட்டான்.

தன் ஒற்றர்கள் மூலம் பகவதி அம்மனுக்கு தூது விட்டான். இதுதான் சரியான சந்தர்ப்பம் பாணாசுரனை அழிக்காமல் விடக்கூடாது என்று நினைக்கும் பகவதி அம்மன் இந்த திருமணத்திற்காக பாணாசுரனுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதுதான் போர் நிபந்தனை. தன்னை எதிர்த்து பாணாசுரன் போரிட வேண்டும் அதில் அவன் வெற்றிபெற்றால் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிடுகிறார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்டு பாணாசுரனும் போருக்கு தயார் ஆகிறான். அதை தொடர்ந்து பாணாசுரனை வதம் செய்ய பகவதி அம்மன் போர்கோலம் பூண்டார். பாணாசுரனை வதம்செய்து வெற்றி வாகை சூடினார். அதன் பிறகு சிவபெருமான் வருகைக்காக நீலக்கடலில் ஒற்றைக்காலில் தவம் செய்ய தொடங்கினார். கைகளில் ஜெபமாலையுடன் அன்னை வடிவமானார் பகவதி அம்மன். இதுவே பகவதி அம்மன் அவதாரம்... பாணாசுரனை அவர் வதம்செய்த வரலாறு.

மணலாக மாறிய உணவு

சிவபெருமான் தேவியை மணமுடிக்க நினைத்தார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் நாரதரின் திட்டத்தால் திருமணம் தடைபட்டது. இதனால் சிவபெருமான் தனது இருப்பிடமாகிய சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும் அதன்பின்னர் என்றும் கன்னியாகவே இருக்க முடிவு செய்தாள். திருமணத்திற்கு செய்யப்பட்ட வகை வகையான உணவுப்பொருட்கள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே இன்றும் குமரி கடற்கரையில் சோற்றுப் பருக்கை போன்ற வெண் சிறு மணலும் வேறு வகையான பல வண்ண மணலும் காணப்படுகிறது என்கிறார்கள்.
Tags:    

Similar News