செய்திகள்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுற்றுலா வேனை படத்தில் காணலாம்

திருச்சி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கைவரிசை கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்

Published On 2019-10-19 13:43 GMT   |   Update On 2019-10-19 13:43 GMT
திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்திய சொகுசு வேனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி:

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித் துறையை சேர்ந்த கணேசன் ஆகியோர் திருச்சி நெ.1 டோல்கேட் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் சுவரில் துளையிட்டு 470 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த முருகனிடம் பெங்களூர் போலீசாரும், சுரேஷிடம் திருச்சி தனிப்படை போலீசாரும் காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கணேசனை திருச்சி தனிப்படை போலீ சார் கைது செய்த நிலையில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கொள்ளை குறித்து காவலில் விசாரிப்பதற்காக நேற்று ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி 7 நாட்கள் காவலில் வைக்க விசாரிக்க அனுமதி வழங்கியதையடுத்து, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் கணேசனிடம் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணத்தை என்ன செய்தார்கள்? என்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கொள்ளைக்கு சொகுசு வேன் ஒன்றை பயன்படுத்தியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் திருச்சி திருவெறும்பூர் அருகே சோழமாதேவியில் நிறுத்தி வைத்திருந்த வேனை பறிமுதல் செய்தனர். வங்கியில் கொள்ளையடிக்க முருகன், சுரேஷ், கணேசன் மற்றும் கியாஸ் வெல்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த வேனைத்தான் பயன்படுத்தியுள்ளனர்.

அதில் தான் சுவரை துளையிடக்கூடிய நவீன கருவிகள், சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளனர். வங்கியில் இருந்து சிறிது தூரத்தில் வேனை நிறுத்தி விட்டு, வங்கிக்கு சென்று கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். அதன்பிறகு கொள்ளையடித்த நகைகளை மூட்டையாக கட்டி வேனில் போட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையடித்ததும் வேனில் செல்லும் போது, நகைகளை அதற்கான எந்திரத்தில் போட்டு அளந்து 4 பேரும் பங்கு பிரித்துள்ளனர். பொதுமக்களுக்கு சுற்றுலா வந்தது போல் தெரியவே, அவர்கள் கொள்ளையடிக்க சொகுசு வேனை பயன்படுத்தியுள்ளனர். டிரைவிங்கில் கைதேர்ந்த கணேசன், கொள்ளையடித்ததும் போலீசார் கண்ணில் சிக்காமல் இருக்க வேனை அவனே ஓட்டிச் சென்றுள்ளான். அந்த வேன் கணேசனுக்கு சொந்தமானதா? அல்லது வேறு யாருடையது? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் 6 நாட்கள் கணேசனிடம் போலீசார் காவலில் விசாரணை நடத்த உள்ளனர். இதன் மூலம் லலிதா ஜூவல்லரி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மற்றும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளை சம்பவங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இதனிடையே சுரேஷிடம் இன்று 5-வது நாளாக போலீசார் காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News