ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா ஆலோசனை கூட்டம்

Published On 2019-06-26 07:41 GMT   |   Update On 2019-06-26 07:41 GMT
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற இருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி தேர்த்திருவிழாவும், 8-ந்தேதி ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற இருக்கிறது. விழாவில் வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்தநிலையில் ஆனித்திருமஞ்சன விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பாஸ்கர் தீட்சிதர் தலைமை தாங்கினார். தீட்சிதர்கள் சோமதண்டபாணி, குஞ்சிதபாதம், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆனித்திருமஞ்சன விழாவை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுப்பது, தரிசன விழாவை குறித்த நேரத்தில் சரியான முறையில் நடத்தி முடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கோவில் பொது தீட்சிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News