செய்திகள்
எடியூரப்பாவும், சித்தராமையாவும் நேரில் சந்தித்து கைக்குலுக்கி கொண்ட காட்சி.

எதிரெதிர் துருவங்களான எடியூரப்பா-சித்தராமையா ஒரே மேடையில் சந்திப்பு

Published On 2019-09-20 02:32 GMT   |   Update On 2019-09-20 02:32 GMT
எதிரெதிர் துருவங்களாக உள்ள எடியூரப்பாவும், சித்தராமையாவும் ஒரே மேடையில் சந்தித்து பேசினர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு :

கர்நாடக தொழில்துறை மற்றும் தலித் தொழில்முனைவோர் சங்கம் சார்பில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிகழ்ச்சிக்கு வந்தார்.

அப்போது மேடையில் இருக்கையில் அமர்ந்திருந்த எடியூரப்பா எழுந்து நின்று, சித்தராமையாவை வரவேற்று இருக்கையில் அமருமாறு கூறினார். சித்தராமையா ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு எடியூரப்பா நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருகிறார். மேலும் பல்வேறு திட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கூறி விசாரணைக்கும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, எடியூரப்பாவை கடுமையாக குறை கூறி வருகிறார். சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் தான் விதான சவுதாவில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இவ்வாறு கர்நாடக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் எடியூரப்பாவும், சித்தராமையாவும் நேற்று ஒரே மேடையில் தோன்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இது கர்நாடக அரசியலில் சிறிது பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள், தங்களுக்கு உரிய பாணியில் கருத்துகளை கூறி வருகிறார்கள்.
Tags:    

Similar News