ஆன்மிகம்
திருநள்ளாறு நளன் குளத்தில் வீசி எறியப்பட்டுள்ள துணிகள்.

சனீஸ்வரர் கோவில் குளத்தில் வீசி எறியப்படும் துணிகள்

Published On 2021-09-06 07:28 GMT   |   Update On 2021-09-06 07:28 GMT
கொரோனா தொற்று காரணமாக, நளன் குளத்தில் புனித நீராட கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காரைக்கால் திருநள்ளாறில் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பொதுவாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நளன்குளத்தில் புனித நீராடுவார்கள். பின்னர் தங்கள் ஆடைகளை குளத்தின் கரையில் உள்ள பெட்டியில் போடுவது வழக்கம். இதனால் குளத்தின் புனித நீர் மாசுபடாமல் இருக்கும். மேலும் குளத்தில் இறங்க முடியாதவர்கள் தண்ணீரை தலையில் தெளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய செல்வார்கள்.

இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக, நளன் குளத்தில் புனித நீராட கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் ஐதீக முறைப்படி தனியார் விடுதிகளில் குளித்துவிட்டு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் ஆடைகளை, நளன் குளத்தின் கரைகளிலும், கோவிலை சுற்றியுள்ள பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் வீசி எறிந்து செல்கின்றனர்.

இதனால் நளன் குளம் மட்டுமல்லாது கோவிலை சுற்றியுள்ள புனித தீர்த்தங்களும் குப்பையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. புனித தீர்த்தத்தின் தண்ணீரும் மாசு அடைந்து வருகிறது. எனவே சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நளன்குளத்தில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும். சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் நளன்குளத்தில் குவிந்து கிடக்கும் ஆடைகளை அகற்றவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News