ஆன்மிகம்
தடையை மீறி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்

தடையை மீறி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்

Published On 2021-02-27 03:46 GMT   |   Update On 2021-02-27 03:46 GMT
புதிய வகை கொரோனா பரவுவதால் திருவண்ணாமலையில் மார்ச் மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 3.50 மணியளவில் தொடங்கிய இன்று (சனிக்கிழமை) மதியம் 2.45 மணிக்கு நிறைவடைகிறது. புதிய வகை கொரோனா பரவுவதால் இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இருப்பினும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நேற்று பகலில் இருந்தே கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
Tags:    

Similar News