லைஃப்ஸ்டைல்
உஷ்ணத்தால் பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சனைகள்

உஷ்ணத்தால் பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சனைகள்

Published On 2021-09-27 07:28 GMT   |   Update On 2021-09-27 07:28 GMT
மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
உஷ்ணத்தால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட வயதில் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்கள் உடலை அதிக சூடாக்கி கூடுதல் தொந்தரவுகளை தரக் கூடும்.

தைராய்டு பாதிப்பு கொண்ட பெண்கள் அதிக வெயிலாக இருந்தாலும், அதிக குளிராக இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பகாலத்தில் மட்டும் தைராய்டால் பாதிக்கப்பட்டவர்களும், பாரம்பரிய தைராய்டு பாதிப்பு கொண்டவர்களும், தைராய்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறவர்களும் கோடை காலத்தில் ரத்த பரிசோதனை செய்து, தைராய்டு அளவை உறுதிசெய்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால், டாக்டரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

தைராய்டு நோய்க்கு ஏற்கனவே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், கோடைகாலத்தில் ஒருமுறை ரத்த பரிசோதனை மேற்கொண்டு மாத்திரையின் அளவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் சுகாதாரத்தில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்றவேண்டும். மாதவிடாயை எதிர்பார்த்து நாப்கின் அணிந்துகொண்டு வெளியே செல்கிறவர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் அதனை மாற்றிவிடுவது அவசியம். அதிக நேரம் ஒரே நாப்கினுடன் இருந்தால் அதில் ஏற்படும் ஈரப்பதம், வியர்வை போன்றவைகளால் தொற்று ஏற்படும். அதனால் தொடை இடுக்குப் பகுதியில் சொறி, தடிப்பு போன்றவை தோன்றும்.

நாப்கின் மாற்றுவதற்கு போதுமான சவுகரியம் இல்லாதவர்களும், நாப்கினால் அசவுகரியத்தை எதிர்கொள்கிறவர்களும் மென்ஸ்ட்டுரல் கப் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையற்ற ரோமங்களை நீக்கவேண்டும். நீக்காவிட்டால் அந்த பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து வாடை வீசுவதோடு கிருமித்தொற்றும் உருவாகிவிடும். தினமும் குளித்து முடிந்ததும், வியர்வை தங்க வாய்ப்புள்ள உறுப்பு பகுதிகளை நன்றாக துடைத்துவிட்டு, ஈரம் அகன்றதும் மாய்ஸ்சரைசர் பூசிக்கொள்வது நல்லது.

வியர்வை தங்கும் பகுதிகளை நன்றாக சுத்தம் செய்தும் சொறியோ வேறு விதமான அவஸ்தைகளோ ஏற்பட்டால் சரும நோய் நிபுணரின் ஆலோசனைபடி அதற்குரிய மருந்துகளை பயன்படுத்தவேண்டும்.

மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தியே ஆகவேண்டும். அவர்கள் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். அதிகம் வியர்க்காத அளவுக்கு பருத்தி ஆடைகளை அணியவேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. அதிக அளவு மசாலாக்கள் சேர்க்காத, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணவேண்டும். வெண்ணெய் நீக்கிய மோரையும் தொடர்ந்து பருகிவர வேண்டும். உற்சாகத்தோடு அவர்கள் மனநலனையும் பாதுகாக்கவேண்டும்.

Tags:    

Similar News