செய்திகள்
கோப்பு படம்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கூடுதல் படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார்

Published On 2021-04-11 11:31 GMT   |   Update On 2021-04-11 11:31 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 3 மாவட்டங்களிலும் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று 100-க்கும் மேற்பட் டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசியில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் 3 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளும் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

நெல்லையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 2,700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று வரை 694 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து கொரோனா அதிகம் பாதித்து வரும் தெருக்களை சுகாதாரத்துறையினர் கம்புகளை வைத்து அடைத்து பொதுமக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலும் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆய்க்குடி, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் தலைமை ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடிய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்தந்த பகுதிகளில் அதாவது கடையநல்லூர், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 25 படுக்கைகளும், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 40 படுக்கை களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்படுவதால் சிறப்பு அதிகாரி உத்தரவின் பேரில் அரசு ஆஸ்பத்திரியில் 1,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருச்செந்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News