செய்திகள்
அஜித் பவார்

அஜித்பவாருக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை- பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி

Published On 2019-11-25 08:28 GMT   |   Update On 2019-11-25 08:28 GMT
அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தது.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் நேற்று முன்தினம் ஆட்சி அமைப்பதற்காக கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்திக்க திட்டமிட்டிருந்தன.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக நேற்று முன்தினம் காலை திடீரென பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அந்த கட்சி மூத்த தலைவர் அஜீத்பவாரை தன் பக்கம் இழுத்து இந்த அதிரடியை பா.ஜ.க. மேற்கொண்டது. முதல்-மந்திரியாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்- மந்திரியாக அஜித்பவாரும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நேற்று முன்தினம் இரவே சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடர்ந்தன. நீதிபதிகள் ரமணா, அசோக் பூசன், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவசேனா சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் சார்பில் வக்கீல் அபிஷேக் சிங்வி, பா.ஜ.க. சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார்கள்.

வக்கீல்கள் வாதம் முடிந்த பிறகு நீதிபதிகள் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் வக்கீல் ஆஜராகாததால் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அனுப்பிய கடிதம், முதல்-மந்திரி தனக்கு மெஜாரிட்டி இருப்பதாக கூறி எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துடன் கொடுத்துள்ள கடிதம் ஆகியவற்றை திங்கட்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றனர்.

அதன்படி இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மகாராஷ்டிரா மாநில விவகார வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் வக்கீல்கள் ஒருங்கிணைந்து ஆவணங்களை தாக்கல் செய்தனர். 

 


மகாராஷ்டிரா சட்டசபையின் பலமான 288 எம்.எல்.ஏ.க்களில் மெஜாரிட்டிக்கு 145 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் தங்களுக்கு 154 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதாக அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆவணங்களை ஏற்றுக் கொண்டு, பட்னாவிசுக்கு உடனே மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட உத்தரவிடுமாறு 3 கட்சி வக்கீல்களும் கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்.

காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையால் முதல்- மந்திரி பட்னாவிசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் 145 எம்.எல். ஏ.க்கள் ஆதரவு பலம் இருப்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய உடனடி நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.

தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான மேஜிக் நம்பரான 145-ஐ எட்ட வேண்டுமானால் மேலும் 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையில் பட்னாவிசால் மேலும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றுவிட முடியுமா? என் பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவாரை துருப்பு சீட்டாக வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைக்கும் முயற்சியை பா.ஜ.க. மேற்கொண்டது. அஜித்பவார் மீது நீர்ப்பாசன திட்டங்களில் ஊழல் செய்ததாக அமலாக்கத் துறையில் வழக்கு இருப்பதால் அதை வைத்து அஜித்பவாரை பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அஜித்பவார் மூலம் 29 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசப்பட்டது.

அவர்களது முதல் கட்ட முயற்சியில் 11 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிக்கினார்கள். ஆனால் அடுத்த சில மணி நேரத்துக்குள் அந்த 11 எம்.எல்.ஏ.க்களில் 7 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மீண்டும் சரத்பவார் பக்கம் சென்று விட்டனர். இதனால் அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

அவருடன் வெறும் மூன்றே மூன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் சரத்பவாரிடம் ஓடி விடக் கூடாது என்று, அவர்கள் மூவரையும் பா.ஜ.க. தலைவர்கள் விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

அஜித்பவாரை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அடுத்து எத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பா.ஜ.க. தலைவர்களின் பார்வை, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் மீது திரும்பி இருக்கிறது. மகாராஷ்டிராவில் 13 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்களது ஆதரவு பெற பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் சுயேட்சைகளுக்கு கடும் மவுசு ஏற்பட்டுள்ளது.

சுயேட்சைகளில் 9 பேர் முதலில் சிவசேனாவை ஆதரித்தனர். தற்போது அவர்களது நிலை கணிக்க முடியாதபடி உள்ளது.

13 சுயேட்சைகள் தவிர சிறு கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள ஐதராபாத்தின் ஒவைசி கட்சி எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவது இல்லை என்று அறிவித்துள்ளது. ஆர்.எச்.எஸ்.பி. என்ற கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறார்.

சமாஜ்வாடி கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், பி.வி.ஏ. கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், பி.டபிள்யூ.பி.ஐ. கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., எஸ். டபிள்யூ.பி. கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆகிய 6 பேரும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வும் காங்கிரசுக்கு ஆதரவான நிலையில் உள்ளார்.

வி.பி.ஏ. கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., பி.ஜே.பி. கட்சியின் 2 எம்.எல்.ஏ., ஜே.எஸ்.எஸ். கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., கே.டி.எஸ்.பி., எம்.என்.எஸ். கட்சிகளின் தலா 1 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. சிறிய கட்சிகளின் 16 எம்.எல்.ஏ.க்களில் பெரும் பாலானவர்கள் சிவசேனா, காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

இதனால் சட்டசபையில் பலப்பரீட்சை நடந்தால் பாரதிய ஜனதாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை திரட்டும் இலக்குடன் பா.ஜ.க. தலைவர்கள் திரைமறைவு அதிரடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News