உள்ளூர் செய்திகள்
வேருடன் சாய்ந்து கிடக்கும் பழமையான ஆலமரத்தை படத்தில் காணலாம்.

100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது

Published On 2022-05-05 10:19 GMT   |   Update On 2022-05-05 10:19 GMT
திருச்சியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது
திருச்சி:

திருச்சியில் அக்னி நட்சத்திரத்தை தணிக்கும் வகையில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் பல்வேறு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சோமரசம்பேட்டை அல்லித்துறை, தாயனூர், அதவத்தூர், போசம்பட்டி, போதாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் ஆங்காங்கே வயல் வெளிகளில் சாய்ந்தன.

அவற்றை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தபுரம் ஆர்எஸ்எஸ் காலனியில் புங்கனூர்- அல்லித்துறை மெயின் ரோட்டில் பொதுமக்கள் உயிருக்கும் வாகன ஓட்டிகள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மிகவும் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று சாய்ந்து இருப்பதாக தகவல் வெளியானது.

தகவல் அறிந்த அல்லித்துறை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்  சம்பவ இடத்திற்கு வந்தார். உடனடியாக அல்லித்துறையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று புதிய மின் கம்பம் நடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.  ஊராட்சி மன்ற தலைவர் சரவணனுக்கும் அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியனூர் கிராமத்தில் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள குழுமாயி அம்மன் கோவில் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் பாதியாக வேருடன் சாய்ந்து விட்டது.

இதேபோல் நேற்று அடித்த சூறைக்காற்றின் விளைவாக சோமரசம்பேடை மற்றும்  குழுமணி மெயின்ரோட்டை இணைக்கும் பிரதான சாலையில் கீழவயலூரில் சுமார் ஐந்து தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News