ஆன்மிகம்
நெற்கதிர்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்ததையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை: பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வினியோகம்

Published On 2021-08-17 03:45 GMT   |   Update On 2021-08-17 03:45 GMT
நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு நிறைபுத்தரிசி பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. முன்னதாக கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர், நெற்கதிர்களை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன்பு படைக்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்க விடுவார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல் மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு தாணுமாலயசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் சாமி சன்னதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதைதொடர்ந்து அந்த நெற்கதிர்களை தெற்கு மண் மடம் பிரதீபன் நம்பூதிரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை நடந்தது. காலை 6 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பகல் 12 மணிக்கு உச்சகாலபூஜையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும் தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை காலை 5.55 மணி முதல் 6.20 மணி வரை நடந்தது. கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, கேசவன் நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதை கோவில் தந்திரி நாராயணன் நம்பூதிரி நடத்தினார். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதேபோல், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமிகோவில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில், வேளிமலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு நடைபெற்றது.
Tags:    

Similar News