ஆன்மிகம்
சிவன்

நாளை மகா சிவராத்திரி: திருச்சி சிவன் கோவில்களில் நான்கு கால அபிஷேகம்

Published On 2021-03-10 07:47 GMT   |   Update On 2021-03-10 07:47 GMT
மகா சிவராத்திரியையொட்டி நாளை (வியாழக்கிழமை) திருச்சி கோவில்களில் 4 கால சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற உள்ளது.
அபிஷேக பிரியரான சிவனுக்கு உகந்தது மகா சிவராத்திரி. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்து சிவனை வழிபட்டால் இப்பிறவியில் நோய் நொடியற்ற வாழ்வதுடன் இறுதியில் முக்தியை அடையலாம் என்பது ஐதீகமாகும்.

அதன்படி நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியாகும். மகாசிவராத்திரியையொட்டி திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நாளை இரவு 9 மணிக்கு சிவனுக்கு திரவிய சுத்தி பூஜையும், அபிஷேகமும் நடைபெறும். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு முதல் காலம், 12 மணிக்கு இரண்டாம் காலம், 2½ மணிக்கு மூன்றாம் காலம், 4 மணிக்கு நான்காம் கால சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் மட்டுமே சுவாமிக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது‌.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், 12 மணிக்கு இரண்டாம் காலம், 2 மணிக்கு மூன்றாம் காலம், 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் சிவராத்திரியையொட்டி வேடன் ஐதீகம் நிகழ்ச்சி முடிவுற்ற உடன் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் நாளை இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் சுவாமிக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் பழச்சாறு என 16 வகையான அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News