ஆன்மிகம்
நந்தியம்பெருமான் பிறப்பு விழா: நந்தியம்பெருமான் குதிரை வாகனத்தில் புறப்பாடு

நந்தியம்பெருமான் பிறப்பு விழா: நந்தியம்பெருமான் குதிரை வாகனத்தில் புறப்பாடு

Published On 2021-03-24 04:03 GMT   |   Update On 2021-03-24 04:03 GMT
நந்தியம்பெருமான் பிறப்பு விழாவையொட்டி திருவையாறிலிருந்து திருமழப்பாடிக்கு நந்தியம்பெருமான் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா புரான காலத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தியபெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால் போன்ற திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இரவு அறம்வளர்த்தநாயகி ஐயாறப்பர் ஆலயத்தில் நந்தியம் பெருமானுக்கும் பட்டாபிஷேகத்தில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணியளவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளைகோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரி முழங்க திருவையாறில் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழப்பாடிக்கு சென்றார். அப்போது வழி நெடுகிழும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி வைத்தியநாதன் சுவாமி கோவிலில் இரவு நந்தியம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நந்திபார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள் இதை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை தருமபுரஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் தருமபுர ஆதீனம் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News