செய்திகள்
செந்தில் பாலாஜி

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி சந்திப்பேன்- செந்தில் பாலாஜி பேட்டி

Published On 2020-02-09 11:09 GMT   |   Update On 2020-02-09 11:09 GMT
போக்குவரத்து கழக வேலை மோசடி தொடர்பாக ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி சந்திப்பேன் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூர்:

கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல். ஏ.வுமான செந்தில்பாலாஜி கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து கழக வேலை மோசடி தொடர்பான வழக்கில் என் பெயரோ, எங்களை சார்ந்தவர்கள் பெயரோ இல்லை. கோர்ட்டுக்கு வழக்கு போன போது வழக்கில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதன்பிறகு எங்களுக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நீதிபதி கூறினார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை தந்து, அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து வழக்கை முடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தவரை வரவழைத்து மீண்டும் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளனர். முடிந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

என் வீடு, என் சகோதரர் வீடு, டெக்ஸ் நிறுவனம் ஆகிய 3 இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர். கிராமத்தில் என் தாய், தந்தையை சிரமப்படுத்தியுள்ளனர். தம்பி வீட்டில் வேலைக்கு இருந்த பணியாளரை அடித்துள்ளனர். கடையில் அராஜக போக்கை கடைப்பிடித்தனர். சென்னை வீட்டில் யாரும் இல்லை. அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.

சென்னை வீட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 290 ரூபாய் எடுத்தனர். 7 பவுன் செயின், மோதிரத்தை எடுத்துச் சென்றனர். இவையெல்லாம் என் கணக்கில் உள்ள பொருட்கள். ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சட்டப்படி வழக்கை சந்திப்போம்.

வரும் சட்டசபை பொதுத் தேர்தலில் நான் போட்டியிடக்கூடாது என்பதற்காக சூழ்ச்சி செய்யும் வகையில் இந்த வழக்கின் மூலம் ஏதாவது ஏற்படுத்த முடியுமா? என்று முயற்சிக்கின்றனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை.

ஆனால் முடிந்த வழக்கை மீண்டும் விசாரணை என்ற பெயரில் போலீசை வைத்து எங்களை துன்புறுத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஆளும் அரசின் அராஜகப் போக்குக்கு போலீஸ் துணை போகிறது. வழக்கு போடுங்க. சந்திக்க தயாராக உள்ளோம். தமிழர் பண்பாடு என்பது வைக்கும் மொய்யை திருப்பி வைப்பதாகும். இதை யாரும் மறக்கமாட்டோம்.

தி.மு.க.வின் உள்ளாட்சி தேர்தல் மாநாட்டை மறைப்பதற்காகத்தான் கரூர் சோதனை என்ற நாடகத்தை அரங்கேற்றினர். இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ள குரூப் தேர்வு முறைகேட்டில் முதல்வர் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News