இஸ்லாம்
புனித அமல அன்னை

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் கடைசி இரவு உணவு வழிபாடு

Published On 2022-04-15 03:35 GMT   |   Update On 2022-04-15 03:35 GMT
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் இரவு உணவு வழிபாடு நேற்று நடந்தது. ஆலய பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமை திருப்பலி நிறைவேற்றினார்.உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ், அருட்தந்தை மைக்கேல் ஆகியோர் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அருட்தந்தை ஜெயசீலன் மறையுரையாற்றினார்.கடைசி இரவு உணவின் போது ஏசு 12 சீடர்களுக்கு பாதங்கள் கழுவி தூய்மைப்படுத்தியதை நினைவுகூரும் வகையில் உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்கினை சேர்ந்த 12 பேரின் கால் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.

திருப்பலி முடிவில் ஏசு துன்பங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் இருந்து நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணி வரை இந்த ஆராதனை தொடர்ந்தது. இந்த வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கெடுத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மவுன ஆராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஆலய வளாகத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. பின்னர் பிற்பகல் 3 மணிவரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருச்சிலுவை வழிபாடு நடக்கிறது.

நாளை(சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன.
ஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு, பாஸ்கா வழிபாடு ஆகியவற்றை தொடர்ந்து நள்ளிரவு ஈஸ்டர் திருப்பலி நடக்கிறது.

Tags:    

Similar News