செய்திகள்
தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கமிடும் பெண்கள்

தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் முழக்கம்... பஞ்சாப் விவசாயிகளின் ரெயில் மறியல் 4வது நாளாக நீடிப்பு

Published On 2020-09-27 10:08 GMT   |   Update On 2020-09-27 10:08 GMT
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் 4வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
சண்டிகர்:

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) சார்பில் மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. 

அதன்படி கடந்த 24ம் தேதி ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் போராட்டக் களத்திலேயே விவசாயிகள் தூங்கினர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

நேற்று (செப்.26) பிற்பகல் ரெயில் மறியல் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்தை நீட்டிக்கும்படி விவசாயிகளும் விவசாய சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்தனர். இதனால் மேலும் 3 நாட்களுக்கு அதாவது, 29-ம் தேதி வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டது. அதன்படி விவசாயிகள் ஏற்கனவே போராட்டம் நடத்திய பகுதியிலேயே முகாமிட்டு ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 


அமிர்தசரஸ் அருகே உள்ள தேவிதாஸ்புரம் கிராமத்தில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தண்டவாளத்தின் நடுவில் அமர்ந்து, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். போராட்டம் நடைபெறும் வழித்தடங்களில் இன்றும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News