ஆன்மிகம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்

ராமேஸ்வரம் திருத்தலத்தில் சில அற்புதங்கள்

Published On 2021-01-05 07:04 GMT   |   Update On 2021-01-05 07:04 GMT
ராமனும், சீதையும் வழிபட்ட ராமேஸ்வரம் ராமநாதர் கோவில், ராமாயண இதிகாச காலத்திற்கும் முற்பட்டது என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.
* ராமனும், சீதையும் வழிபட்ட ராமேஸ்வரம் ராமநாதர் கோவில், ராமாயண இதிகாச காலத்திற்கும் முற்பட்டது என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. ராமநாதர் ஆலயத்தை வலம் வரும் பிரகாரங்களில் நிறைய லிங்கங்கள் இருப்பதைக் காண முடியும். அப்படி ஆலயத்தின் மூன்றாம் பிரகாரத்தில் ‘நீலேஸ்வரர்’ என்ற பெயரில் ஒரு லிங்கம் உள்ளது. இதன் சிறப்பு என்ன தெரியுமா?.

சீதாதேவி பிரதிஷ்டை செய்த ராமநாதர் லிங்கத்திற்கு முன்பாக, இந்த ஆலயத்தில் மூலவராக இருந்த சிவலிங்கம் இந்த நீலேஸ்வரர் லிங்கம் என்று சொல்லப்படுகிறது. ராமநாதர் ஆலய பிரகாரத்தில் இருக்கும் பல லிங்கங்களுக்கு மத்தியில் இந்த லிங்கமும் இருப்பதால், பத்தோடு பதினொன்று என்று நினைத்து செல்பவர்களே ஏராளம். அதே போல் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களும் கூட இதுபோன்ற லிங்கங்களை சரிவர பராமரிப்பது பற்றி யோசிப்பது இல்லை. இந்த நீலேஸ்வரர் லிங்கத்திற்கு, சிவராத்திரி நாளில் மட்டும், வில்வ இலையால் அர்ச்சனை, அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.

* ராமநாதர் கோவிலில் பலருக்கும் தெரியாத ஒன்று, ‘சேதுமாதவர் சன்னிதி’. காலில் சங்கிலியுடன் பெருமாள் வீற்றிருக்கும் சேதுமாதவர் சன்னிதி சிறப்புக்குரியதாகும். சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தனாக விளங்கினான். அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, மகாலட்சுமி தேவியையே, மன்னனுக்கு மகளாகப் பிறக்கும்படி செய்தார், பெருமாள். மன்னனின் மகளுக்கு திருமணப் பருவம் வந்தது. அப்போது ஒரு இளைஞனின் உருவத்தில் அங்கு வந்த பெருமாள், மன்னனின் மகளிடம் சேட்டைகள் செய்தார்.

இதுபற்றி அறிந்த மன்னன், இளைஞனை பிடித்து வந்து சிறையில் அடைத்தான். அதோடு சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அந்த சங்கிலியில் கட்டுண்டு கிடந்தார். அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ‘இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது நானே’ என்று மன்னனுக்கு சுட்டிக்காட்டினார். இதையடுத்து மறுநாள் பெருமாளுக்கும், தன்னுடைய மகளுக்கும் திருமணம் செய்து வைத்தான், சுந்தரபாண்டியன். இளைஞனாக வந்த பெருமாள், இந்த ஆலயத்தில் சேதுமாதவராக சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறார்.

சேதுமாதவர் சன்னிதிக்கு அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் ஆகிய இருவரும் வீற்றிருக்கின்றனர். கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடி விட்டு இந்த சேதுமாதவர் சன்னிதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷம் நீங்கும்.

* ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு ‘பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னிதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்), வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
Tags:    

Similar News