ஆன்மிகம்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வட்டம் போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட700 கோவில்கள் இன்று திறப்பு

Published On 2020-09-01 06:50 GMT   |   Update On 2020-09-01 06:50 GMT
கடலூர் பாடலீஸ்வரர்கோவில் உள்பட மாவட்டத்தில் 700 கோவில்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கிராமப்புற, நகர்ப்புற கோவில்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் அதிக வருமானம் உள்ள கோவில்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள புதிய அறிவிப்பில், தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 கோவில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். கடலூர் பாடலீஸ்வரர்கோவில், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள்கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவிலுக்குள் வட்டம் போடுதல், சானிடைசர் வைத்தல் போன்ற பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனிடம் கேட்டபோது, ஏற்கனவே அரசு வழிகாட்டுதல் படி கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக நாளைக்கு (அதாவது இன்று) சுமார் 700 கோவில்கள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோவில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஆகவே பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிந்து தான் வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
Tags:    

Similar News