வழிபாடு
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

Published On 2022-04-15 08:47 GMT   |   Update On 2022-04-15 08:47 GMT
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது. ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார்.

குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவார். இந்த ஆண்டு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு நேற்று அதிகாலை 4.16 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். குருப்பெயர்ச்சி விழா அதிகாலையில் நடந்தாலும் ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே கோவிலுக்கு வந்தனர்.

நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரையிலும் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. குடிநீர் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குருபெயர்ச்சி விழாவுக்காக திட்டைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

குருப்பெயர்ச்சியையொட்டி வருகிற 24-ந் தேதி லட்சார்ச்சனையும், 29, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.
Tags:    

Similar News