செய்திகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பெண்களுக்கே முன்னுரிமை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Published On 2021-10-28 08:20 GMT   |   Update On 2021-10-28 10:43 GMT
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மரக்காணத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இதுதொடர்பாக, பல கருத்துகள் மூத்த தலைவர்களும், அனுபவம் வாய்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் நவம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு சோதனை அடிப்படையில்தான் இருக்கும். இதன்மூலம் இத்திட்டம் எப்படி எல்லாம் செயல்படுத்தப்படுகிறது என்று கவனிக்கப்படும். நீங்கள் சொல்வதுபோல் இந்த அமைப்பு வந்துவிடுமோ, அந்த அமைப்பு வந்துவிடுமோ, அவர்களின் யோசனைகளை கொண்டு வந்துவிடுவார்களோ என்று பல கருத்துகளும், எதிர்ப்புகளும் வருகின்றன.

ஆனால், அது எதிர்ப்பு இல்லை எங்களை எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்கிறார்கள். இந்த எச்சரிக்கை எங்கு இருக்க வேண்டும் என்று சொன்னால், தன்னார்வலர்களை தேர்வு செய்யும்போது இருக்க வேண்டும். அவர்களின் பின்புலம் என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் உள்ளூர் மக்கள் மூலமாகவும், நாங்கள் அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் விதத்தில் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படும்.

ஏற்கனவே 80 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள் என்றால் அதில் கிட்டத்தட்ட 68 ஆயிரம் பேர் பெண்கள். அதனால், பெண்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள், அதிகம் படித்தவர்கள் போன்ற பல நிபந்தனைகளின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறோம். கண்டிப்பாக அவர்கள் கூறிய எச்சரிக்கை உணர்வை மனதில் வைத்துக் கொண்டு தன்னார்வலர்களை தேர்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News