செய்திகள்
பஸ்கள்

தீபாவளி பண்டிகை- 2000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

Published On 2020-10-14 06:42 GMT   |   Update On 2020-10-14 10:46 GMT
தீபாவளி பண்டிகைக்கு 2000 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சனிக்கிழமை பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமை அன்று பெரும்பாலானவர்கள் பயணத்தை மேற்கொள்வார்கள்.

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் பஸ், ரெயில்களில் வழக்கமாக முன்பதிவு செய்வார்கள்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை. ஒருசில இடங்களுக்கு மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அரசு பஸ்கள் 50 சதவீதம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஆனால் அரசு சிறப்பு பஸ்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பே சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்படும்.

கொரோனா பாதிப்பின் காரணமாக சிறப்பு பஸ்கள் அறிவிப்பு தாமதமாகி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மத்தியில் அச்ச உணர்வு இருப்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கினால் பயன் அளிக்குமா? என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசிக் கிறார்கள்.

கடந்த வருடம் 4000 ஆயிரம் சிறப்பு பஸ்கள் தீபாவளிக்கு இயக்கப்பட்டது. சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

இந்த வருடம் கொரோனா பரவல் அச்சம் நிலவுதால் மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் சிறப்பு பஸ்களை குறைக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்கலாமா? அதற்கான சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு குறித்த பயம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் பண்டிகை நாட்களும் வருவதால் மக்களின் போக்குவரத்து பயன்பாடு எப்படி இருக்கும் என்று கணிக்க இயலாது.

ஆனாலும் தற்போது 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் குறைவாக சிறப்பு பஸ்களை இயக்கலாமா? என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

2000 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றி அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போக்குவரத்து பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படும்.

அதன் அடிப்படையில் சிறப்பு பஸ்கள் எத்தனை என்பது முடிவு செய்யப்படும். போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆலோசித்த பின் இறுதி முடிவை அவர் அறிவிப்பார்.

இந்த மாத இறுதியில் தீபாவளி சிறப்பு பஸ்கள் அறிவிப்பு வெளியாகும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். ரெயில்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அதிகளவு இயக்கப்படாததால் அரசு சிறப்பு பஸ்களுக்கு தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சிறப்பு பஸ்களுக்கான அறிவிப்பு வந்த உடன் முன்பதிவு நடைபெறும். 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதனால் வெளியூர் செல்ல விருப்பம் உள்ளவர்கள் www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

கொரோனா பரவலில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்தால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் பஸ்களை இயக்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News