லைஃப்ஸ்டைல்
சேது பத்தாசனம்

வயிற்றில் கொழுப்பு படியாமல் தடுக்கும் ஆசனம்

Published On 2021-04-03 02:33 GMT   |   Update On 2021-04-03 02:33 GMT
சேது என்றால் 'பாலம்' என்றும் பந்தம் என்றால் 'கட்டுதல்' அல்லது 'நிறுத்துதல்' என்று பொருள். இவ்வாசனம் பாலத்தைப் போன்று தோன்றுவதால் 'சேது பத்தாசனம்' என்று பெயர் பெற்றது.
செய்முறை:

முதலில் மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் மடித்து புட்டத்துக்கு அருகில் வைக்கவும். கால் மூட்டுகள் வானத்தைப் பார்த்து இருக்க  வேண்டும் வலது கணுக்காலை வலது கையாலும், இடது கணுக்காலை இடது  கையாலும் பிடித்துக் கொண்டு, இரண்டு தோள்களுக்கு இடையே  எவ்வளவு தூரம் இருக்கிறதோ அதே அளவு தூரம் கால் பாதங்களுக்கு இடையேயும் இருக்குமாறு வைக்க வேண்டும்.

இதே நிலையில் இருந்து கொண்டு மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்துக் கொண்டு இடுப்பு மற்றும் முதுகை தரையில் இருந்து மேலே தூக்கவும். ஆனால்  பாதங்கள், கைகள், கழுத்து, தலையின் பின்பகுதி ஆகியவை தரையிலேயே பதிந்திருக்க வேண்டும். இதே நிலையில் சாதாரணமான சுவாசத்தில் 1  நிமிடம் வரை இருக்கவும்.பின்பு மூச்சை வென்விட்டுக் கொண்டே இடுப்பு மற்றும் முதுகை தரையில் இறக்கவும். கைகளின் பிடியைத் தளர்த்திக்  கொண்டு இரண்டு கால்களையும் நீட்டவும். இவற்றை மூன்று முறை செய்யவும்.

சேது பத்தாசனத்தின் பயன்கள்:

இவ்வாசனம் உணவு செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. நரம்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. கழுத்துப் பகுதியின்  எலும்பை உறுதி செய்து கழுத்தைப் பலப்படுத்துகிறது. முகத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகப் பொலிவு பெறச் செய்கிறது.

வயிற்றில்  கொழுப்பு படியாமல் இவ்வாசனம் தடுக்கிறது. முதுகு தண்டை ஆரோக்கியத்துடன் வைக்க இது சிறந்த ஆசனம் ஆகும். இடுப்புப் பகுதி தசைகளை  வன்மையடையச் செய்கிறது. கல்லீரல்,மண்ணீரல், கணையம், சிறுநீரகம் இவற்றை நல்ல நிலையில் இயங்கச் செய்கிறது. காலின் தசையை  வலுவாக்கப் பயன்படுகிறது. இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஊட்டத்தை சீராக்க பயன்படுகிறது.
Tags:    

Similar News