லைஃப்ஸ்டைல்
அன்றாட சிக்கனம் சேமிப்பை உயர்த்தும்

அன்றாட சிக்கனம் சேமிப்பை உயர்த்தும்

Published On 2021-06-12 04:22 GMT   |   Update On 2021-06-12 05:49 GMT
எல்லாவற்றையும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தினால் மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சேமிக்கலாம். இன்றைய சூழலுக்கு சேமிப்பு என்பது மிக மிக அவசியம்.
கொரோனா சுத்தம், சுகாதாரத்தையும் கற்றுத்தந்தது போல சிக்கனத்தின் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் இன்றைக்கும் எப்படி பட்ஜெட் போடுவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். எளிமையான பட்ஜெட் போட்டால் நிச்சயம் கடனில்லாத வாழ்க்கை வாழலாம். இதோ.. அதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம்.

முதலில் திட்டமில் மிக அவசியம். சம்பளத்தை கையில் வாங்கியவுடன் எதற்கு எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. திட்டமிடல் எவ்வளவு முக்கியமோ, அதே போல் அத்தியவசியசெலவுகள் எவை என்பதை அறிந்து பட்ஜெட் போட வேண்டியதும் அவசியம். மளிகை சாமான்கள், காய்கறி, பால் போன்றவற்றுக்கு முதலில் முன்னுரிமை அளித்து பட்ஜெட்களுக்கு முக்கியத்துவம் தரலாம்.

ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடுவதற்கு முன் கடந்த காலங்களில் தேவையில்லாமல் செய்த செலவுகள் என்னென்ன? அந்த செலவை இந்த மாதத்தில் எப்படி குறைப்பது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையேற்றம், பட்ஜெட்டில்  செலவு எகிறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கடைகளுக்கு செல்லும் போது வாகனங்களில் செல்வதை தவிர்த்து நடந்து செல்லலாம்.

இன்று என்ன சமைக்க போகிறோம் என்பதை சரியாக திட்டமிட்டு அதற்கான பொருட்களை தயார்நிலையில் வைத்துக்கொண்டு சமைக்கத் தொடங்கினால் எரிவாயு வீணாவதை தவிர்க்கலாம்.

அதே போல்தேவைக்கேற்ப மட்டும் மின் சாதனங்களை இயக்குவது நல்லது. உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், மின் சாதனங்களை ஒதுக்கி வைத்து விட்டு சிறுசிறு வேலைகளை செய்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அத்தியாவசியப்பொருட்களை தவிர மற்ற பொருட்களை அவசியம் தேவைப்பட்டால் மட்டும் வாங்குவது நல்லது. தேவையற்ற பொருட்கள் வாங்குவதை குறைத்து செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் பெருமளவில் சேமிக்கலாம். நெருக்கடியான காலகட்டங்களில் உதவக்கூடியது சேமிப்பு மட்டுமே. சம்பளம் வாங்கியவுடன் முதலில் அவசரத் தேவைக்காக சிறிதளவு பணம் ஒதுக்கி வைக்க வேண்டும்.

நிகழ்கால வாழ்க்கையில் சிக்கனம் எப்படி தேவையோ அது போல எதிர்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும் சேமிப்பு கட்டாயம். மாதந்தோறும் சேமிப்பதற்காக குறைந்த பட்சம் 1000 ரூபாய் தனியாக எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இந்த சேமிப்பு பிள்ளைகளின் கல்விச்செலவு மற்றும் பிற தேவைகளுக்கு நிச்சயம் உதவும்.

இதுபோன்று எல்லாவற்றையும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தினால்  மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சேமிக்கலாம். இன்றைய சூழலுக்கு சேமிப்பு என்பது மிக மிக அவசியம்.
Tags:    

Similar News