செய்திகள்
கைது

மு.க. ஸ்டாலின் பற்றி கிண்டல்- சுவரொட்டிகளை கிழித்த 12 தி.மு.க.வினர் கைது

Published On 2020-10-26 10:24 GMT   |   Update On 2020-10-26 10:24 GMT
முக ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை கிழித்த 12 திமுகவினர் போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை மாநகரில் காந்திபுரம், ராமநாதபுரம், ஆர். எஸ்.புரம், செல்வபுரம், குனியமுத்தூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

ஒரு சுவரொட்டியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா? துண்டுசீட்டு தலைமையா? என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரின் கேலிச்சித்திர படம் இடம் பெற்று இருந்தது.

மற்றொரு சுவரொட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் உழைப்பை நம்பலாமா? பிறப்பை நம்பலாமா? என்ற வாசகத்துடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கேலி சித்திர படம் இடம் பெற்று இருந்தது.

அந்த சுவரொட்டியில் எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற வில்லை.

இதனை பார்த்த தி.மு.க. வினர் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சுவரொட்டியை கண்டித்து புகார் செய்தனர்.

கேலி சித்திரத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டியை பார்த்து ஆத்திரம் அடைந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சுவரொட்டியை கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் சுவரொட்டியை கிழித்த தி.மு.க. இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூர் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்த இளைஞர் அணியை சேர்ந்த நாகராஜ் உள்பட 7 பேரையும், ஆர்.எஸ்.புரத்தில் சுவரொட்டியை கிழித்த பஷீர் என்பவரையும், செல்வபுரத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்த மின்னல் சிவா, கேபிள் மணி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News