செய்திகள்
கோப்புபடம்

மதுரையில் சுகாதார அதிகாரி வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி நகை-பணம் கொள்ளை

Published On 2021-07-09 09:40 GMT   |   Update On 2021-07-09 09:40 GMT
மதுரையில் சுகாதார அதிகாரியின் வீடு புகுந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை:

மதுரை வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி புவனேசுவரி (வயது 47). இவர் விசுவநாதபுரத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

புவனேஸ்வரி நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவர் எழுந்து வந்து கதவை திறந்தார்.

அப்போது முகமூடி அணிந்த 3 பேர் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கத்திமுனையில் புவனேசுவரியிடம், “தங்கச் சங்கிலி, தோடுகளை கழற்றி கொடு” என்று மிரட்டினர்.

புவனேசுவரி வேறுவழியின்றி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி, மற்றும் அரை பவுன் தோடு கழற்றி கொடுத்தார்.

மர்ம கும்பலில் இருந்த ஒருவன், “பீரோ சாவியை கொடு” என்று கேட்டான். புவனேசுவரி தர மறுத்தார்.

ஆத்திரமடைந்த கொள்ளையன், “ பீரோ சாவியை தரவில்லை என்றால் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான்.

பயந்துபோன புவனேசுவரி பீரோ சாவியை எடுத்துக் கொடுத்தார். மர்ம கும்பல் பீரோவைத் திறந்து அதில் இருந்த ரூ.40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதன்பிறகு கொள்ளையர்கள் “நாங்கள் இங்கு வந்ததை யாரிடமாவது சொன்னால் உங்களை தேடி வந்து குத்திக் கொன்று விடுவோம்“ என்று மிரட்டி விட்டுச் சென்றனர்.

இது குறித்து புவனேசுவரி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி. டி.வி. கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்று உள்ள காட்சி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்.

மதுரையில் சுகாதார அதிகாரியின் வீடு புகுந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News