செய்திகள்
கோப்புபடம்

ஆட்டோவில் கடத்திய 300 மதுபாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது

Published On 2021-01-21 11:29 GMT   |   Update On 2021-01-21 11:29 GMT
புதுச்சேரியில் இருந்து திருவெண்ணெய்நல்லூருக்கு ஆட்டோவில் கடத்திய 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

புதுச்சேரியில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், கரடிப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேரில் ஒருவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் பிடிபட்டார். பின்னர் அந்த ஆட்டோவை போலீசார் சோதனை செய்ததில் ஆட்டோவில் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் பகுதியில் 300 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட நபர், கரடிப்பாக்கத்தை சேர்ந்த முருகன் (வயது 42) என்பதும் தப்பி ஓடியவர் அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பதும் இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சேகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News