செய்திகள்
விராட் கோலி

உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் தோல்வி - இந்திய கேப்டன் விராட்கோலி கருத்து

Published On 2021-06-24 10:01 GMT   |   Update On 2021-06-24 10:01 GMT
உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய வீரர்கள் தேர்வு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவுத்தம்டன்:

முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பட்டத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடந்தது.

இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்னும், நியூசிலாந்து 249 ரன்னும் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 170 ரன்களில் சுருண்டது. இதனால் நியூசிலாந்துக்கு 53 ஓவர்களில் 139 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த அணி 45.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் வில்லியம்சன் (52ரன்), முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் (47 ரன்) சிறப்பாக ஆடி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்றது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 2-வது இன்னிங்சில் கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்து இருந்தால் தோல்வியை தவிர்த்து இருக்கலாம். மேலும் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த போட்டியில் சிறந்த அணியைத்தான் தேர்வு செய்தோம் என்று கேப்டன் விராட் கோலி தனது முடிவை நியாயப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில் சிறந்த அணியைத்தான் (11 பேர்) நாங்கள் தேர்வு செய்தோம். இதே அணிதான் பல்வேறு வகையான ஆடுகளத்தில் வெற்றியை பெற்றிருக்கிறது.

முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் ஆட்டம் தொடங்கிய போது மிகவும் கடினமான சூழல் ஏற்பட்டது. இதனால் 3 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தோம்.

தடைகள் இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் அதிக ரன்களை குவித்து இருக்க முடியும். நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவதற்கு நியூசிலாந்து அணி தகுதியானதுதான். அந்த அணியின் ஒட்டு மொத்த வீரர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்கள் தங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் எங்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர்.

சிறந்த டெஸ்ட் அணியை முடிவு செய்ய குறைந்தபட்சம் 3 இறுதிப்போட்டிகளை வைத்திருக்க வேண்டும். ஒரு போட்டியை வைத்து மட்டும் முடிவு செய்ய இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News