செய்திகள்
கடைகள் தீப்பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்.

குமரலிங்கம் அருகே 7 கடைகள் தீப்பிடித்து எரிந்தது - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2021-04-27 22:43 GMT   |   Update On 2021-04-28 14:11 GMT
குமரலிங்கம் அருகே 7 கடைகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.
போடிப்பட்டி:

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இந்த கடைகளின் முன்பு ஷெட் அமைத்து மீன் கடைகள் அமைத்திருந்தனர். மேலும் இந்த பகுதியில் ஒரு டீக்கடை மற்றும் ஒரு பெட்டிக் கடையும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கடைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் தீ அனைத்து கடைகளுக்கும் பரவியது.

இது குறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதற்குள் 5 மீன் கடைகள், ஒரு டீக்கடை, ஒரு பெட்டிக்கடை முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் மீன்களை இருப்பு வைத்திருந்த குளிர் சாதனப்பெட்டிகள் முழுவதுமாக எரிந்து மீன்கள் அனைத்தும் கருகி வீணாகி விட்டது. எலெக்ட்ரானிக் தராசுகள், டீக்கடையிலுள்ள பாய்லர் உள்ளிட்ட பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகி வீணாகி விட்டது. பெட்டிக்கடையிலுள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டது. 2 புளியமரங்களும் தீயில் எரிந்து கருகி போனது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை.

இந்த தீ விபத்து குறித்து பாதிப்புக்கு உள்ளான மீனவர்கள் கூறும்போது “நீண்ட நாட்களாகவே மீன் கடைகளை காலி செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திட்டமிட்டு யாராவது தீ வைத்தார்களா? என்று தெரியவில்லை. எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீ விபத்துக்கான காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும். மேலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு உதவும் விதமாக சேதமடைந்த கடைகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் 150-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் உள்ளது. இந்த குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் உள்ளது. ஆறு மற்றும் குளங்களில் மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகிறோம்.இதுதவிர கடல் மீன்களையும் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.” என்றனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News