செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தொற்று வந்த பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு - ஆய்வு முடிவில் அம்பலம்

Published On 2021-04-09 00:49 GMT   |   Update On 2021-04-09 00:49 GMT
கொரோனாவின் விளைவுகள் குறித்து சுவீடனில் உள்ள டான்டரிட் ஆஸ்பத்திரி மற்றும் கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
புதுடெல்லி:

லேசான கொரோனா தொற்று வந்து 8 மாதங்களில் பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படுவதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவின் விளைவுகள் குறித்து சுவீடனில் உள்ள டான்டரிட் ஆஸ்பத்திரி மற்றும் கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை ஜாமா பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று லேசாக ஏற்பட்டாலும்கூட, 8 மாதங்களில் பத்து பேரில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

நீண்ட கால பாதிப்பு எதுவாக இருக்கும் என்றால், கொரோனாவின் லேசான தாக்குதலுக்கு ஆள்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு வாசனை மற்றும் சுவை இழப்பு மற்றும் சோர்வு மிதமானது முதல் தீவிரமானது வரை ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர் சார்லட் தாலின் கூறுகையில், “ஒப்பீட்டளவில் இளம் மற்றும் ஆரோக்கியமான உழைக்கும் குழுவில் கொரோனாவுக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகள் இருப்பதை நாங்கள் ஆராய்ந்தோம். மேலும் நீண்ட கால அறிகுறிகள் வாசனை மற்றும் சுவை இழப்புதான் என கண்டறிந்தோம். மயக்கம் மற்றும் சுவாச பிரச்சினைகளும் கொரோனா வந்தவர்களுக்கு ஏற்படுவதை கண்டோம். ஆனால் எல்லோருக்கும் ஒரே அளவில் பாதிப்பு இருப்பதில்லை” என குறிப்பிட்டார்.

இருப்பினும் மூளை சோர்வு, நினைவாற்றல் குறைவு, தசை மற்றும் மூட்டு வலி, இதயத்துடிப்பில் மாறுபாடு அல்லது நீண்ட கால காய்ச்சல் போன்ற உடல் கோளாறுகள் இருப்பதாக தெரியவரவில்லை.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்டபோதிலும், ஒப்பீட்டளவில் பெரிய விகிதாச்சாரம் நீண்ட கால அறிகுறிகளை கொண்டிருந்து, வாழ்க்கை தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான செபாஸ்டியன் ஹாவர்வெல், “இந்த ஆய்வின மூலம், இளம் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் சமூகத்தின் பிற குழுக்கள், கொரோனா வைரஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நோய்த்தொற்றுக்கு பின்பும் நீண்டகாலமாகக்கூட வாழ்க்கைத் தரத்தை கணிசமாக குறைக்க முடியும் என்று தோன்றுகிறது” என குறிப்பிட்டார்.

இதையொட்டிய ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News