செய்திகள்
காஞ்சிபுரத்தில் தேங்கி கிடக்கும் விநாயகர் சிலைகள்

காஞ்சிபுரத்தில் ஒரு வருடமாக தேங்கி கிடக்கும் விநாயகர் சிலைகள்

Published On 2021-08-04 09:42 GMT   |   Update On 2021-08-04 09:42 GMT
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். இவர்கள் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகளை செய்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.

இதன்காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு 25 தொழிற்கூடங்களும் உள்ளன. இவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கின.

இந்த சிலைகள் மற்றும் பொம்மைகள் பல இடங்களில் மழை நீரால் சேதம் அடைந்தன. இதனால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறவில்லை. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-

ஆண்டு முழுவதும் தொழில் செய்தாலும் எங்களால் விநாயகர் சதுர்த்தியின்போது மட்டுமே வருமானம் ஈட்டமுடியும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது தனிநபர்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தும் அமைப்பினர் பொது இடங்களில் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும்.

ஏற்கனவே சிலைகள் தேங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியாமல் சிலைகளை தயாரிக்காமல் உள்ளோம். தற்போது தலைவர்களின் சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரிக்கும் பணிகளில் மட்டும் ஈடுபட்டுள்ளோம். இதையும் விற்பனை செய்ய போதிய வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுகிறோம். சிலைகளை விற்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கூறுகையில், ‘கொரோனா 3-வது அலை பரவினால் மக்கள் கூட்டம் கூடும் நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து சூழ் நிலைக்கு ஏற்றவாறு அரசு தான் கொள்கை முடிவு எடுக்கும்.

பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். அவர்கள் செய்யும் பொம்மைகளை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கைவினை பொருட்களாக விற்பனை செய்ய அந்த துறை செயலாளரிடம் பேசியுள்ளேன். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பொம்மைகளை விற்பனை செய்ய இடம் ஒதுக்கி தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.


Tags:    

Similar News