ஆன்மிகம்
கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்த பக்தர்கள்

Published On 2021-11-17 04:24 GMT   |   Update On 2021-11-17 04:24 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.

கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, நேற்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பும், மாட வீதியை சுற்றியும் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
Tags:    

Similar News