செய்திகள்
கொள்ளை

திண்டுக்கல்லில் டைல்ஸ் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Published On 2021-10-18 11:30 GMT   |   Update On 2021-10-18 11:30 GMT
திண்டுக்கல்லில் தொடரும் சம்பவமாக மேலும் ஒரு கடையை உடைத்து பணம், செல்போன் திருடப்பட்டது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் விஜயகுமார். இவர் செட்டிநாயக்கன்பட்டி அருகே சத்யாநகரில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று காலை மீண்டும் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது வியாபாரத்துக்கு வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் அலுவலக செல்போன் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் அதில் இருந்த பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விஜயகுமாரின் வீட்டின் முன்பு போட்டுச் சென்றுள்ளனர்.

அடையாள அட்டையில் இருந்த முகவரியை பார்த்து அதனை கொண்டு வந்து வீட்டின் முன் போட்டனரா? அல்லது திருட்டில் ஈடுபட்ட நபர்கள் விஜயகுமாருக்கு தெரிந்தவர்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாலுகா இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா இயங்காததால் கொள்ளையர்கள் உருவம் பதிவாகவில்லை. எனவே கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்லில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நாகல்நகரில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை முயற்சி நடந்தது. பாறைப்பட்டி ஏ.பி. நகரில் பர்னிச்சர் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

மேலும் பொன்னகரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் கொள்ளை நடந்தது. நேற்று திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே செல்போன் கடையில் பணம், செல்போன் திருடப்பட்டது. இந்த சம்பவங்களில் இது வரை யாரும் சிக்கவில்லை.

இந்த நிலையில் மேலும் செட்டிநாயககன்பட்டி பகுதியில் உள்ள கடையில் திருட்டு நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News