லைஃப்ஸ்டைல்
முதல் மாத குழந்தையைப் பராமரிக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

முதல் மாத குழந்தையைப் பராமரிக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

Published On 2021-03-27 03:27 GMT   |   Update On 2021-03-27 03:27 GMT
முதல் முதலாக உங்களது உலகத்தில் பிறந்திருக்கிறது உங்கள் குழந்தை. எவ்வளவு வேகமாக வளர போகிறது எனக் கவனியுங்கள். முதல் மாத குழந்தை என்னென்ன செய்யும் என்று பார்க்கலாம்.
பிறந்த முதல் மாதத்திலே குழந்தைகள் செய்வது இவைதான்.

உற்றுப் பார்ப்பது
சிரிப்பது
கண் சிமிட்டுதல்
தூங்குவது
அழுவது
பால் குடிப்பது
உடலை முறுக்குவது
வில் போல உடலை வளைப்பது

எனப் பல நிலைகளில் குழந்தைகள் உங்களை ஈர்க்கும்.

காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.

ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும்.

பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும்.

அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும்.

இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும். நம் கவனத்தை ஈர்க்கும்.

தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும்.

தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும்.

குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.

பெற்றோர் செய்ய வேண்டியவை

குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

எதிர் பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும்.

மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.

பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும்.

கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.

பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும்.

குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.

கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும்.

கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.

பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும்.

பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும்.

இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.

குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். ஹோட்டல், திரையரங்குகள், உயிர் நீத்தோர் இடத்துக்கு இப்படி எங்கும் செல்ல கூடாது. ஏனெனில் கிருமித்தொற்று ஏற்படலாம்.
Tags:    

Similar News