சிறப்புக் கட்டுரைகள்
குஷ்பு

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்- என்னை உரிமை கொண்டாடிய குடும்பம்- 26

Published On 2022-01-24 11:32 GMT   |   Update On 2022-01-24 11:32 GMT
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குஷ்பு... குஷ்பு... என்று என் பெயர் உச்சரிக்கப்பட்டது. இதை விட பெருமை என்ன வேண்டும்? இந்த காலத்தைப் போல் சமூக வலைத் தளங்கள் எதுவும் அப்போது கிடையாது.


வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்பதைவிட எதிர்பாராததுதான் அதிகம் நடக்கும். அது நமக்கு சாதகமாக அமைந்தால் சந்தோசத்தை தரும். பாதகமாக அமைந்தால் தவிக்க வைத்து விடும். இது எல்லோருக்கும் பொதுவான விதிதான்.

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஓரளவு பெயர்பெற தொடங்கியதும் இந்தி பட உலகம்தான் நமக்கு உதவும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். அதை விட தெலுங்கு பட உலகில் பெயர் வாங்கியதும் தெலுங்கு திரை உலகம் தான் கை கொடுக்கும் என்றும் நினைத் தது உண்டு.

ஆனால் தமிழ் திரை உலகுக்கு வருவேன். சாதிப்பேன் என்று எதிர்பார்க்க வில்லை. வாழ்க்கையில் எந்த பிடிமானமும் இல்லாமல் 3 அண்ணன்களோடும், அம்மாவோடும் சென்னையில் தவித்தேன். ஆனால் இந்த அளவுக்கு சிகரம் தொட முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

வாழ்க்கையில் தெருக்கோடியில் இருந்த நான் சென்னையில் அதுவும் போட் கிளப்பில் வீடு வாங்குவேன் என்பது எதிர்பாராதது.

சாதாரணமாக சினிமாவுக்குள் நுழைந்த நான் தமிழ் ரசிகர்கள் கோபுரத்தில் ஏற்றிவைத்து கொண்டாடும் அளவுக்கு உயர்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குஷ்பு... குஷ்பு... என்று என் பெயர் உச்சரிக்கப்பட்டது. இதை விட பெருமை என்ன வேண்டும்? இந்த காலத்தைப் போல் சமூக வலைத் தளங்கள் எதுவும் அப்போது கிடையாது. ஆனாலும் மக்கள் மத்தியில் நான் பேசப்பட்டேன். நேசிக்கப்பட்டேன்.

கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் சென்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு தமிழ் தெரியாது. எனவே ரசிகர்களின் பிரதிபலிப்புகளை உடனுக்குடன் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போனது.

தொலைதூர இடங்களில் இருந்து பஸ், வேன் பிடித்து ரசிகர்கள் என்னை பார்க்க சென்னைக்கு வருவார்கள். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்திக்கும் வழக்கத்தை கடைப்பிடித்தேன்.

அதுவே சிக்கல்களையும் உருவாக்கியது. நந்தனத்தில் இருந்து போட்கிளப் வரை வாகனங்கள் அணிவகுக்க தொடங்கியது. வாகனங்களாலும், ரசிகர்கள் கூட்டத்தாலும் போட் கிளப் பகுதி திக்குமுக்காடும்.

இதனால் அங்கு குடியிருந்தவர்கள் தங்கள் தனிமை பறிபோவதாக ஆதங்கப்பட்டார்கள். என்னால் ரசிகர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

என்னுடைய கொள்கை, சினிமா ஆர்வத்தில் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட கூடாது. வீட்டு நிலைமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நன்றாக படிக்க வேண்டும்.. உழைக்க வேண்டும். என்பது தான். குடும்பத்துக்காக உதவ வேண்டும். அதைத் தான் ரசிகர்களுக்கும் வேண்டு கோளாக வைத்தேன். கிராமங்களில் இருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டும், கால் நடையாகவும் குடும்பம் குடும்பமாக சென்று நகர பகுதிகளில் மக்கள் எனது பல படங்களை பார்த்து ரசித்ததை கேள்விப்பட்டேன். அவர்கள் கொடுத்த அந்த ஆதரவுதான் என்னை உச்சம் தொட வைத்தது.

சின்னத்தம்பி படம் 150 நாட்களையும் தாண்டி ஓடியது. தென் மாவட்டங்களில் சில தியேட்டர்களில் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு ‘குங்குமச்சிமிழ்’ வாங்கி பரிசளித்ததையும் அறிந்தேன் அப்போதெல்லாம் ரசிகர்கள் ஏராளமான கடிதம் எழுதுவார்கள். தினமும் ஏராளமாக வந்து குவியும்.

கடிதங்களில் அவர்கள் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி இருப்பார்கள். பல கடிதங்களை படித்தாலே சிரிப்பு வரும். அதே நேரம் பல ரசிகர்கள் என்னை பாராட்டி மனதை தொடும் வகையிலும் எழுதி இருப்பார்கள்.

‘மரணம் சுமந்தாலும் மறந்து போகா உறவாய் நீ’ - என்று ஒரு ரசிகர் எழுதியதை பார்த்ததும் அவர் எந்த அளவுக்கு என்னை நேசித்து இருக்கிறார் என்று நெகிழ்ந்து இருக்கிறேன்.

கையில் பூ மாலையுடன் வருவார்கள். சிலர் ரத்தத்தில் கையெழுத்து போட்டு அனுப்புவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் என் மீது உயிராகவும், தீவிரமாகவும் இருந்தார்கள்.

ஒரு ரசிகர் என்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக கூறி என் வீட்டுக்கு வந்து அமர்க்களம் பண்ணி விட்டார். நான் கழுத்தில் மாலையுடன் இருக்கும் ஒரு போட்டோவை எடுத்து அவரது படத்தையும் அருகில் ஒட்டி இருவரும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருப்பது போல் ‘செட்-அப்’ செய்து ‘குஷ்பு என் மனைவி. இதோ பாருங்கள் நாங்கள் திருமணம் செய்து கொண்ட போது எடுத்தபடம், என்று பெரிய பரபரப்பையே ஏற்படுத்தி விட்டார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு நிகழ்வு மறக்க முடியாதது. நான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தேன்.

திடீரென்று என் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. அழுது கொண்டே ‘நீ உடனே வீட்டுக்கு வா’ என்றார்கள்.

எனக்கு பயம். அம்மா என்ன ஆச்சு? சொல்லுங்க... என்றேன். ஆனால் அவரிடம் இருந்து அழுகை மட்டும்தான் பதிலாய் வந்தது.

நான் ஷூட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன். வீட்டின் முன்பு ஒரு தம்பதி மற்றும் அவர்களுடன் பத்து பன்னிரெண்டு பேர் அமர்ந்து இருந்தார்கள்.

எனக்கு எதுவும் புரியவில்லை. என்னவென்று கேட்டபோது நான் அந்த தம்பதியின் குழந்தை என்றும் 2 வயதாக இருந்தபோது திருநெல்வேலியில் ஒரு கோவில் திருவிழாவுக்கு அழைத்து சென்ற போது காணாமல் போய்விட்டதாகவும் கூறி நீ எங்கள் மகள்தான். எங்களோடு வந்துவிடு என்றார்கள்.

இது என்னடா வம்பா போச்சு என்று அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினேன் கேட்கவில்லை.

இந்த களேபரத்தை பார்த்ததும் அம்மாவோ “நான் 3 ஆண் பிள்ளைகளுக்கு பிறகு தவமிருந்து பெற்ற மகள். இவளை போய் உரிமை கொண்டாடுகிறீர்களே” என்று ஓ... என அழுது கொண்டிருந்தார்.

ஆனால் வந்தவர்களோ அவள் மூக்கை பாருங்கள். அந்த மச்சத்தை பாருங்கள். இவள் என் மகளேதான் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.

எனக்கு வேறு வழியே தெரியவில்லை போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். அடையாறில் இருந்து போலீசார் வந்து அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சத்தம் போட்டு ஊருக்கு அனுப்பினார்கள்.

ஒரு வழியாக அந்த பிரச்சினையும் ஓய்ந்தது.

ஒருவேளை அந்த ஏழைத் தாயின் குழந்தை உண்மையிலேயே காணாமல் போயிருக்கலாம். குழந்தையை தொலைத்த தவிப்பு பெற்ற தாய்க்குத்தானே தெரியும்?

அய்யய்யோ இப்படி நான் சந்தித்த அனு பவங்கள் பல உண்டு.

(இன்னொரு அனுபவத்துடன் அடுத்த வாரம் வருகிறேன்)

Tags:    

Similar News