செய்திகள்
பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டபோது எடுத்த படம்.

தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் 4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு

Published On 2019-11-30 18:08 GMT   |   Update On 2019-11-30 18:08 GMT
தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் 4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
கரூர்:

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பொருட்களை பயன் படுத்துவது தமிழ்நாட்டில் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் வரும் தீமைகள் குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் போன்ற இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் துறைசார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது களஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றார்கள். அந்த ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறியப்பட்டால், அவை அப்புறப் படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு சட்ட விதிகளுக்குட்பட்டு அபராதம் விதிக்கப்பட்டும் வருகின்றது.

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், கிராம ஊராட்சிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், ‘‘தூய்மையே சேவை’’ என்ற திட்டத்தின் மூலம் தூய்மைக் காவலர்கள் என்று அழைக்கப்படுகின்ற துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் 150 வீடுகளுக்கு ஒருவரும், குடி யிருப்புகள் பரவலாக உள்ள பகுதிகளில் 75 வீடுகளுக்கு ஒருவரும் என தூய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் வீடுவீடாகச்சென்று குப்பைகளை சேகரித்து தூய்மைப்பணிகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளையும் தூய்மைக்காவலர்கள் மேற்கொள்கின்றனர்.

அவ்வாறு பிரித்தெடுத்த குப்பைகளில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பேட்டை ஊராட்சியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்ததில் சுமார் 4 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் பாதுகாப்பாக அழிக்கப்படுவதற்காக டால்மியாபுரத்தில் உள்ள சிமெண்டு ஆலையின் எரிகலனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News