ஆன்மிகம்
கோவிலில் சிறப்பு தரிசன பாதையில் நீண்ட வரிசையில் குவிந்திருந்த பக்தர்களின் கூட்டத்தை படத்தில் காணலாம்.

ராமேசுவரம் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2019-12-30 03:35 GMT   |   Update On 2019-12-30 03:35 GMT
தொடர் விடுமுறையால் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியால், போக்குவரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளின் 10 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா இடங்களில் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்தநிலையில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலிலும் கடந்த 1 வாரமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளதுடன் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சாமி, அம்பாளை தரிசனம் செய்ய இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு கட்டண தரிசன பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

கடந்த ஆண்டை விட அதிகமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தந்துள்ளதால், ராமேசுவரத்தில் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லை. எனவே மேலவாசல் முதல் நடுத்தெரு, திட்டக்குடிசந்திப்பு, ராமதீர்த்தம் உள்ளிட்ட பல இடங்களிலும் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் வந்து செல்ல ஒரே சாலை மட்டுமே உள்ளதால், இந்த வாகனங்கள் நிறுத்தத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூடுதலான போக்குவரத்து போலீசார் இல்லாததாலும் ராமேசுவரம் பஸ் நிலையம், கோவில்சாலை, தனுஷ்கோடி சாலை என எங்கு பார்த்தாலும் கடந்த 1 வாரமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வயதானவர்களும் சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

1 ஆண்டுக்கு மட்டும் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி வருகிறது. இருப்பினும் வாகனங்கள் வந்து செல்ல ஒரே வழிப்பாதை மட்டுமே உள்ளதால் பள்ளி விடுமுறை மற்றும் கோடை கால விடுமுறை நாட்களில் ராமேசுவரம் நகர் பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

மாவட்ட நிர்வாகம் ராமேசுவரம் வரும் சுற்றுலா வாகனங்கள் ஒரு வழியாக வந்து மற்றொரு வழியாக வெளியே திரும்பி செல்லும் வகையில் மாற்று பாதை அமைத்து, நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடிகளை நிரந்தரமாக சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம் கோவில் ரத வீதிக்குள் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் கோவிலுக்கு வரும் போலீசார் மற்றும் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தோடு வாகனங்களில் கிழக்கு ரத வீதி வாசல் வரை தாராளமாக வந்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் ரத வீதிகளில் நடந்து சென்று தான் சாமியை கும்பிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News