செய்திகள்
வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டபோது எடுத்த படம்.

2021-22-ம் ஆண்டிற்கு வளம் சார்ந்த வங்கி கடனாக ரூ.4,046 கோடி வழங்க இலக்கு - திட்ட அறிக்கையில் தகவல்

Published On 2020-11-20 13:46 GMT   |   Update On 2020-11-20 13:46 GMT
நீலகிரி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிக்கு வளம் சார்ந்த வங்கி கடனாக ரூ.4 ஆயிரத்து 46 வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் வங்கியாளர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி 2021-2022-ம் ஆண்டிற்கான நபார்டு வங்கி தயாரித்த ரூ.4,046.63 கோடி வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் தூனேரி ஊராட்சி கூட்டமைப்பு குழுவுக்கு ரூ.24.5 லட்சம் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வங்கி (நபார்டு) 2021-22-ம் ஆண்டிற்கான நீலகிரி மாவட்டத்தின் வளம் சார்ந்த வங்கி கடன் ரூ.4, 046.63 கோடி வழங்க நபார்டு வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது. இது நடப்பாண்டிற்கான கடன் திட்டத்தை காட்டிலும் 11.44 சதவீதம் அதிகம். விவசாயத்துக்கான வங்கிக்கடன் ரூ.2,773.99 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

விவசாயத்தில் மூலதனம் உருவாக்கும் விதமாக வங்கி கடன் அளிக்க வேண்டும் என்றும், இதற்கான அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை அமல்படுத்துவது அவசியமாகிறது. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் நீண்ட கால விவசாய கடன் வழங்க வேண்டும்.

விவசாயத்தில் இழப்புகளை ஈடு செய்வதற்காக வங்கிகள் கடன் பெறுகின்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் பயிர் கடன் திட்டத்தின் கீழ் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் குறு, சிறு விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கான கடன்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கி அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) திருமலை ராவ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News