செய்திகள்
கைது

மதுரையில் வங்கி மேலாளர் போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் நகை அபேஸ்- 2 பெண்கள் கைது

Published On 2021-04-30 06:40 GMT   |   Update On 2021-04-30 06:40 GMT
மதுரை மாநகரில் மூதாட்டியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தங்க நகைகளை அபேஸ் செய்த 2 பெண்கள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை அண்ணாநகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முத்து (வயது 61). இவர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

‘எனக்கு வண்டியூர் பி.கே.எம் நகரைச் சேர்ந்த பிரதீப் குமார் மனைவி அபிநயா (32) என்பவருடன் நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னிடம் வந்தார்.

அப்போது அவர் “நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளேன். என் நகைகள் அனைத்தும் வங்கியில் அடமானத்தில் உள்ளது. எனவே உங்களின் தங்கச்சங்கிலியை கழற்றி தாருங்கள். திருமணத்துக்கு சென்று வந்த பிறகு திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறினார்.

இதை நம்பி நான், அபிநயாவிடம் 2 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி கொடுத்தேன். இதனை வாங்கிக் கொண்ட அவர் திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகும் நகையை திருப்பி தரவில்லை. நான் அவரிடம் நகையை கேட்டபோது அதோ தருகிறேன் இதோ தருகிறேன் என்று கூறி என்னை ஏமாற்றி வந்தார்.

இந்த நிலையில் எனக்கு, அபிநயாவிடம் இருந்து போன் வந்தது. நான் வங்கியில் உள்ள என் நகைகளை மீட்க போகிறேன். எனவே நீங்கள் மேலவாசல் வாருங்கள் அங்கு நான் உங்களின் செயினை திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறினார்.

இதையடுத்து நான் மேல வாசலில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றேன். அப்போது அபிநயா என்னிடம் மீனா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தினார். “இவர் இந்த வங்கியின் மேலாளர். என் நகைகளின் மதிப்பு அடமானம் வைத்த மதிப்புக்கு மேலே சென்று விட்டது. எனவே நீங்கள் போட்டிருக்கும் நகைகளை கழற்றி தாருங்கள். இதன் மூலம் நான் என் நகைகளை மீட்டு கொள்கிறேன். அதன் பிறகே என் நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் உங்களின் நகையை திருப்பி தந்து விடுகிறேன்” என்று கூறினார்.

இதனை நம்பிய நான், அவர்களிடம் 11 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி கொடுத்தேன். அதை வாங்கிய அவர்கள் “வங்கியில் நகை அடகு வைக்க வேண்டும் என்றால் போட்டோ எடுக்க வேண்டும்“ என்று கூறி என்னை ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அவர்கள், என்னிடம் “ஒரு சில ஆவணங்களை வாங்க வேண்டியுள்ளது எனவே நீங்கள் இங்கு காத்திருங்கள். சிறுது நேரத்தில் வந்து விடுகிறோம்“ என்று கூறி அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு அவர்கள் திரும்பி வரவே இல்லை.

எனவே நான் மீண்டும் வங்கிக்கு சென்று விசாரித்தேன். அப்போதுதான் அபிநயா என்னிடம் அறிமுகம் செய்த மீனா என்பவர் அந்த வங்கியின் மேலாளரே இல்லை என்று தெரிய வந்தது.

இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் மாநகர குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜசேகர் மேற்பார்வையில் திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மரியசெல்வம், கணேசன், போத்திராஜ், ஏட்டுகள் ஜெகதீசன், சுந்தர் மற்றும் அன்பழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மதுரை மேலவாசல் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி அதில் இடம் பெற்றுள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் முத்துவை 2 பெண்கள் வங்கிக்குள் அழைத்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் 2 மர்ம பெண்கள் தொடர்பாக பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மதுரையில் ஒரு அலுவலகத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த மீனாவும், அபிநயாவும் போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர். இருந்தபோதிலும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 11.5 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது.

திலகர் திடல் போலீஸ் போலீஸ் நிலையத்துக்கு 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மூதாட்டியிடம் தங்க நகை அபேஸ் செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மதுரை மாநகரில் மூதாட்டியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தங்க நகைகளை அபேஸ் செய்த 2 பெண்கள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மூதாட்டிகளை குறிவைத்து எண்ணற்ற மோசடி கும்பல் இயங்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கூடுதல் வட்டி பணத்துக்கு ஆசைப்படாமல் தங்க நகைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்களின் முதலுக்கே மோசம் வந்து சேர்ந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News