உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் பாய்வதால் வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை காணலாம்

தியாகதுருகத்தில் விவசாய நிலத்தில் கழிவுநீர் பாய்வதால் பயிர்கள் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

Published On 2022-05-07 11:07 GMT   |   Update On 2022-05-07 11:07 GMT
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து கழிவுநீர் விளைநிலங்களில் செல்லாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் பேரூராட்சி உட்பட்ட புக்குளம் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தப்படும் கழிவு நீர், கால்வாய் மூலம் சித்தலூர் சாலையோரம் உள்ள பிரதான வாய்க்காலில் செல்கிறது. இவ்வாறு செல்லும் கழிவுநீர் சாலையோரமாக தொடர்ந்து செல்ல வழி இல்லாமல் அருகிலுள்ள விளைநிலங்களில் புகுந்து விடுகிறது.

இதனால் அந்த பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பயிர் செய்ய முடியாமல், மகசூல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மாயவன் (வயது 56) என்பவர் கூறுகையில், எனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வாழை, சம்பங்கி, குண்டுமல்லி ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளேன். இந்த நிலையில் புக்குளம் பகுதியில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர் கால்வாய் மூலம் விளைநிலங்களில் பாய்கிறது. இதனால் எனது நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள சம்பங்கி, குண்டுமல்லி ஆகிய பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தது.

மேலும் 1 ஏக்கர் அளவில் பயிர் செய்யப்பட்ட வாழை வளர்ந்த நிலையில் வாழை மரத்தில் வேர் அழுகல் ஏற்பட்டு வாழை மரங்கள் சிறுத்து போகிறது. மேலும் வாழை மரம் குலை தள்ளிய நிலையில் வாழைக்காய் பிஞ்சுகளாக உள்ளபோதே வாழை மரங்கள் திடீரென சாய்ந்து விடுகின்றன. இதனால் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து கழிவுநீர் விளைநிலங்களில் செல்லாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News