செய்திகள்
கோப்புப்படம்

வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை

Published On 2020-11-05 22:04 GMT   |   Update On 2020-11-05 22:04 GMT
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வகை செய்யும் புகையிலை தடை சட்ட மசோதா நிறைவேறி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சியோல்:

வடகொரியாவில் அபூர்வ நிகழ்வாக அந்த நாட்டின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியதாகவும், அதில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வகை செய்யும் புகையிலை தடை சட்ட மசோதாவும், கம்பெனி சட்ட திருத்த மசோதாவும் நிறைவேறி இருப்பதாக சியோலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அங்கு நிறைவேற்றப்பட்டுள்ள புகையிலை தடை சட்ட மசோதா, சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான சட்ட மற்றும் சமூக கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதின் மூலம் மக்களின் வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வழிவகை செய்துள்ளது. புகை பிடிப்பது தொடர்பாக அனைத்து நிறுவனங்களும், அமைப்புகளும், பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் வகுத்துள்ளது.

மேலும், அரசியல் நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், பொது இடங்கள், குழந்தைகள் வளர்ப்பிடங்கள், பொது சுகாதார நிறுவனங்கள், வணிக மற்றும் பொது உணவு நிறுவனங்கள், பொது போக்குவரத்து சாதனங்கள் ஆகியவற்றில் புகை பிடிக்கவும் தடை விதித்துள்ளது.

இந்த சட்டத்தை மீறி பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சிகரெட் புகைக்கும் வழக்கம் உடையவர். இந்த சட்டத்தால் அவர் இனி புகை பிடிப்பதை கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags:    

Similar News