செய்திகள்
விராட் கோலி - பேர்ஸ்டோவ்

நாளை கடைசி போட்டி - ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

Published On 2021-03-27 08:36 GMT   |   Update On 2021-03-27 08:36 GMT
நாளை நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புனே:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது.

இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இந்தியா இருக்கிறது. அதே நேரத்தில் ஆறுதலுக்காக ஒருநாள் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

நேற்றைய போட்டியில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இதை இந்தியாவை விட இங்கிலாந்து வீரர்கள் மிகவும் நன்றாக பயன்படுத்தி கொண்டனர்.

பேட்டிங்கில் நன்றாக இருக்கும் இந்திய அணி பந்துவீச்சில் பலவீனத்துடன் காணப்படுகிறது. கடைசி ஆட்டத்தில் இதை சரி செய்வது அவசியமாகும். குல்தீப் யாதவ் நீக்கப்படலாம். 10 ஓவர் பந்து வீசிய அவர் நேற்று 84 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. முதல் ஆட்டத்திலும் இதே நிலை தான். இதனால் அவரது இடத்தில் யசுவேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெறலாம். மற்றபடி மாற்றம் எதுவும் இருக்காது.

இங்கிலாந்து வீரர்கள் நேற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். தொடக்க வீரர் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகள் நாளை மோதுவது 103-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 102 போட்டிகளில் இந்தியா 54-ல், இங்கிலாந்து 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

நாளைய பகல்-இரவு ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News