ஆன்மிகம்
மார்கபந்தீஸ்வரர் கோவில் சிம்மகுளத்தில் குளிக்க தடை

மார்கபந்தீஸ்வரர் கோவில் சிம்மகுளத்தில் குளிக்க தடை

Published On 2020-12-08 06:29 GMT   |   Update On 2020-12-08 06:29 GMT
மார்கபந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சிம்மகுளம் உள்ளிட்ட 3 நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான நள்ளிரவில் சிம்மகுளம் திறக்கும் நிகழ்ச்சி, சூரிய தீர்த்தம் மற்றும் பிரம்மக்குளம் ஆகிய 3 நீர்நிலை தீர்த்தங்களில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் நீராடி கோவில் வளாகத்தில் தூங்கி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இந்தாண்டு இந்த கோவிலில் உள்ள சிம்மகுளம் உள்ளிட்ட 3 நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா தொற்று பரவல் முன்எச்சரிக்கை மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுமக்கள் www.tnhrce.gov.in இணையதள முகவரியில் வருகிற 10-ந் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். ஒருநாளைக்கு 3 ஆயிரம் பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம், பூக்கள் எடுத்துவர அனுமதி இல்லை. பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News