செய்திகள்
கோப்புபடம்

இம்மாதம் நூல் விலை உயர்த்தப்படாததால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

Published On 2021-10-03 06:25 GMT   |   Update On 2021-10-03 06:25 GMT
நூற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும் நூல் விலையை நிர்ணயிக்கின்றன.
திருப்பூர்:

ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என வரும் ஜனவரி மாதம் வரை தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வருகின்றன.

இதையடுத்து  திருப்பூர் உள்நாட்டுக்கான பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனாவால் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில்  ஆர்டர்களை பெற்று ஆடை தயாரிப்பதில் நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலங்களில் பிரதான மூலப்பொருளான நூல் விலை உயர்ந்து  பின்னலாடை துறையினருக்கு நெருக்கடி  ஏற்படும்.

நூற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும்  நூல் விலையை நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் கடந்த 2020 நவம்பர்  மாதம் முதல் 2021 ஏப்ரல் வரை  தமிழக நூற்பாலைகள் ஒசைரி நூல் விலையை உயர்த்தியது. இருப்பினும் கடந்த 5 மாதங்களாக நூற்பாலைகள்  நூல் விலையை ஒரே சீராக தொடர்கின்றன.

இம்மாத ஒசைரி நூல் விலை தற்போது  வெளியிடப்பட்டு உள்ளது. இதில் நூல் விலை உயர்த்தப்படாமல் பழைய விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளன. 

இது பண்டிகை கால ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நூல் விலை விவரம் வருமாறு:-

20ம் நம்பர் கோம்டு ரக நூல் (வரி நீங்கலாக)   ரூ.254 , 24ம் நம்பர் ரூ. 264 ,30ம் நம்பர் நூல் ரூ.274 , 34ம் நம்பர் ரூ.294 , 40ம் நம்பர் ரூ.314,  20ம் நம்பர் செமிகோம்டு ரக  நூல் ரூ. 244 , 24ம் நம்பர் ரூ.254, 30ம் நம்பர் ரூ.264,  34ம் நம்பர் ரூ.284, 40ம் நம்பர் ரூ.304  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News