கதம்பம்
கோப்புப்படம்

இப்படி செய்யணும் எண்ணெய் குளியல்!- சித்த மருத்துவர் வேலாயுதம்

Published On 2022-01-21 11:15 GMT   |   Update On 2022-01-21 11:15 GMT
எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்களாக சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
நம் முன்னோர், நோய் உடலை அண்டாமல் காக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழிகளைப் பின்பற்றினர். அவற்றில் எண்ணெய்க் குளியலுக்கு முக்கியப் பங்கு உண்டு.

எண்ணெய்க் குளியலின் பயன்கள்:

‘வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு’ என்பது பழமொழி. ‘நோய் வந்து வைத்தியரிடம் சென்று செலவு செய்வதைவிட எண்ணெய்ப் பொருள்களைத் தயாரிக்கும் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கிக் குளித்து வந்தால் நோய்கள் அண்டாது’ என்னும் பொருள்பட சொல்லப்பட்டது.

எண்ணெய், தட்பவெப்ப நிலைக்கேற்ப உடல் சூட்டைப் பராமரிக்கும். உடல் சோர்வு நீக்கி நிம்மதியான உறக்கம் தரும்; சிரங்கு, புண் போன்ற சருமம் தொடர்பான நோய்களை நீக்கும்; எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி உடல் நாற்றம் விலகும். சருமத்திலுள்ள ஈரத் தன்மையைப் பராமரித்து முகமும் உடலும் பொலிவு பெறச் செய்வதுடன் இளமையையும் தக்க வைக்கும்.

நோய் எதிர்ப்பாற்றலையும் மெய், வாய், கண், செவி, நாசி ஆகிய  ஐம்புலன்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். உடலில் பித்தம் அதிகமாவதால் ஏற்படும் `குருதி அழல்’ எனப்படும் உயர் ரத்தஅழுத்தம், மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மனநிலையில் சமநிலையின்மை போன்றவற்றிலிருந்து காக்கும். ‘காளஞ்சகப்படை’ எனப்படும் சொரியாசிஸ் உள்ளிட்ட சரும நோய்கள் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை வராமல் தடுக்கும். இப்படியாக, எண்ணெய்க் குளியலால் பெறக்கூடிய பலன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நவீன அறிவியல் ஆராய்ச்சிகளும் இவற்றை உறுதி செய்கின்றன.
 
எப்படிக் குளிக்க வேண்டும்?

`நாள் இரண்டு, வாரம் இரண்டு’ என்பது சித்தர்கள் வாக்கு. நாள் இரண்டு மலம் கழித்தல்; வாரம் இரண்டு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி அவசியமோ, அதேபோல முறைப்படிக் குளிப்பதும் அவசியமானது.

உதாரணமாக, எண்ணெயைத் தலையில் தேய்த்ததும் உடனடியாக ஷாம்புவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க் குளியலே அல்ல. அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப்பலனை அடையமுடியும்.

முதலில் உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்க்கவேண்டும். குறிப்பாக நவ துவாரங்களான கண், மூக்கு, காது, வாய், தொப்புள், ஆசனவாய் போன்ற இடங்களில் எண்ணெய் விட்டு சிறிதுநேரம் ஊற வைக்கவேண்டும். குறிப்பாக, உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்று பொறுமையாக வட்ட வடிவில் தேய்க்கவேண்டும். இது மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையைக் கொடுக்கும்.

10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறியதும் குளிக்கலாம். குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்குச் சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தலாம். குளித்ததும் நன்றாகத் தலை மற்றும் உடலை உலர்த்த வேண்டியது அவசியம். எண்ணெயை முழுமையாக தேய்த்துக் குளிக்காவிட்டாலும் உச்சந்தலை, உள்ளங்கால், தொப்புள் ஆகிய மூன்று இடங்களிலாவது தேய்த்துக் குளிக்கலாம். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுள்ள வெந்நீரில் குளிக்கவேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்களாக சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

எந்த எண்ணெய் நல்லது?

நம் ஊரில் நம் தட்பவெப்ப நிலையில் விளையக்கூடிய எள் எண்ணெய்யைத்தான் ‘நல்லெண்ணெய்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
‘தைலம்’ என்றால் வடமொழியில் ‘எண்ணெய்’ என்று பொருள்.

‘மூட்டு வலி, உடல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் தினமும் நல்லெண்ணெயைத் தடவினால் மூட்டுகளில் வலி குறைவதுடன், பலப்படவும் உதவும்.

அதிக உடல் சூடு, மூலம், மலச்சிக்கல் சார்ந்த பிரச்சனைகளுக்கு விளக்கெண்ணெய் தடவிக் குளிப்பது நல்ல பலன் தரும்.



வறண்ட சருமம், சிறு புண்கள் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும். சித்த மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் சளி பிடித்துவிடும், காய்ச்சல் வரும் என்றெல்லாம் அச்சம் கொள்கிறார்கள். நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய்க் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய்க் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றலாம்; அதற்காகப் பயப்படத் தேவையில்லை.

ஆனால் அதற்கும் ஒரு வழிமுறைகளைத் தந்திருக்கிறார்கள் சித்தர்கள். அதாவது, நல்லெண்ணெயை ஒரு கரண்டியில் எடுத்து லேசாகச் சூடாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் புழுங்கலரிசி, வெள்ளைப்பூண்டு 2 பல், மிளகு 4, சிறிதளவு சீரகம் சேர்த்தால் பொரிந்துவிடும்.

அதன்பிறகு அந்த எண்ணெய்யை உடல் முழுவதும் கதகதப்பாக தேய்க்கலாம். இதனால் சளி, காய்ச்சல் தொந்தரவு வராது.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிப்பதற்கும் தைலங்கள் இருக்கின்றன. உடல் சூடானவர்களுக்கு சந்தனாதித் தைலம் மற்றும்  சீரகத் தைலம், கபாலத்தில் நீர் கோத்திருந்தால் சுக்குத் தைலம், அரக்கு தைலம் எனக் குளியலுக்கென ஏராளமான தைலங்களை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எண்ணெய்க் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை!

எண்ணெய்க் குளியல் செய்யும்நாளில் உடல் இயக்கத்துக்கு நல்ல ஓய்வு தேவை. உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில் தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் போன்ற குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

மேலும் மாமிசம், மது, புகையைத் தவிர்க்கவேண்டியது அவசியம். எளிதில் செரிமானமாகும் அரிசி உணவுகளையே அன்றைய தினம் சாப்பிடவேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கம் கூடாது.  மிளகு ரசம் அருந்தலாம்.
Tags:    

Similar News