செய்திகள்
விருத்தாசலம் புறவழிச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்.

ஓடும் காரில் திடீர் தீ : நீதிபதியின் கணவர் உடல் கருகி உயிரிழப்பு

Published On 2021-01-11 23:17 GMT   |   Update On 2021-01-11 23:17 GMT
விருத்தாசலத்தில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் நீதிபதியின் கணவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று மதியம் 1 மணியளவில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த கார், விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது.

உடன் காரை ஓட்டி வந்தவர் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்க முற்பட்டார். அதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ ஜூவாலைக்குள் சிக்கிய அவரால் வெளியே வர முடியவில்லை.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து, உள்ளே சிக்கி இருந்தவரை மீட்க முயன்றனர். ஆனால் இறுதியாக அவர் தீயில் கருகி பலியானார்.

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காரில் வந்தவர் உடல் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக இருந்ததால், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை.

இதைத்தொடர்ந்து, காரின் பதிவு எண்ணை அறிந்து, அதன் மூலம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த கவியரசு(வயது 37) என்பது தெரியவந்தது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை (35). இவர் விருத்தாசலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 3 மாதங்களாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ராமச்சந்திரன் பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

கவியரசுக்கு நேர்ந்த கோர விபத்து குறித்து, நீதிபதி மணிமேகலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டதும், அதிர்ச்சியடைந்த அவர் கண்ணீர் விட்டு அழுதபடி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

ஆனால், போலீசார் கவியரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து நீதிபதி மணிமேகலை கண்ணீருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கவியரசு நேற்று தனது காரை எடுத்துக்கொண்டு விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அங்கு தரிசனத்தை முடித்த அவர், பின்னர் காரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது புறவழிச்சாலை வழியாக சென்ற அவர், விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News