செய்திகள்
கமல்ஹாசன் பிரசாரம் செய்த காட்சி.

தமிழனின் தலையில் கடன் சுமை ஏறும் இலவசங்களால் ஏழ்மை ஒழியாது- கமல்ஹாசன் பிரசாரம்

Published On 2021-03-24 08:28 GMT   |   Update On 2021-03-24 08:28 GMT
இன்று காலை ராமநாதபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை:

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, டார்ச்லைட் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதுபோன்று நடைபயிற்சி சென்றும், ஆட்டோ, பஸ்சில் பயணித்தும் தனக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று காலை ராமநாதபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-

தமிழகத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. எனவே தமிழகத்தை சீரமைக்க நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தஞ்சாவூரில் நான் பிரசாரம் மேற்கொண்டாலும் என்னுடைய மனம் கோவை தெற்கில் தான் இருக்கிறது. தமிழகத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு இருந்தாலும் திரும்ப, திரும்ப இந்த தொகுதிக்கு நான் வந்து கொண்டு தான் இருப்பேன். நாளைக்கு நாங்கள் செய்ய வேண்டிய திட்டங்கள் பல உள்ளன. இதுதான் எங்கள் திட்டம். இதை வைத்து கொள்ளுங்கள் என்று உங்கள் மீது திணிப்பது நல்லது கிடையாது. நாங்கள் சில திட்டங்கள் வைத்துள்ளோம். அத்துடன் நீங்கள் சொல்வதையும் கேட்டு அதனையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம். அதற்காக தான் தினமும் வீதி, வீதியாக சுற்றி திரிந்து மக்களை சந்தித்து வருகிறோம். இந்த தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளோம்.

நாம் வசதியாக வாழும் இடத்தில் இருந்து சற்று தள்ளி ஏழ்மை தாண்டவமாடி கொண்டிருக்கும். இதனை எல்லோரும் கவனிக்க வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கவனித்தாக வேண்டும்.

மக்களை மையப்படுத்தும் அரசியலை தான் நீங்கள் மெச்சி தூக்கி பிடிக்க வேண்டும். அவர்கள் தரும் 5 ஆயிரத்திற்காக உங்கள் வாழ்க்கையை 5 வருடம் குத்தகைக்கு விட்டு விடாதீர்கள். அவர்கள் தரும் இலவசங்களால் உங்கள் ஏழ்மை உங்களை விட்டு போக போவதில்லை. 50 வருடமாக போகாத ஏழ்மை இவர்கள் கொடுக்கும் இலவசங்களால் போக போகிறதா? போகவே போகாது. அது அப்படியே தான் இருக்கும்.

அவர்கள் இலவசங்கள் கொடுக்க, கொடுக்க தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கடன் சுமை ஏறி கொண்டே போகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டியது உங்களது கடமை.

அதற்கு இருக்கும் ஒரே கருவி மக்கள் நீதிமய்யம் மட்டும் தான். அதன் ஒரு சிறு கருவி நான். என்னை கருவியாக பயன்படுத்துங்கள். நாங்கள் இலவசமாக மீன் குழம்பு வைத்து தரமாட்டோம். ஆனால் வருடம் முழுவதும் பயன்படுத்தும் தூண்டிலையும், மீன் பிடிக்கும் திறமையும் உங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் திட்டம். அப்படி செய்து விட்டால் நீங்கள் 10 பேருக்கு மீன் குழம்பு கொடுப்பீர்கள்.

அதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் உயர்ந்து வறுமை கோட்டிற்கு மேலே வந்துவிட்டால் இந்த மாதிரி அயோக்கியர்களை நீங்கள் திரும்பி பார்க்க மாட்டீர்கள். அந்த பயத்தில் தான் ஏழ்மையை ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள். அதில் இருந்து மாறுவோம். மாற்றுவோம். உங்களால் அதனை செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News