செய்திகள்
வேளாண் சட்டம்

குழுவே வேளாண் சட்டத்திற்கு ஆதரவு: விவசாயிகள் எப்படி அவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியும்- காங்கிரஸ்

Published On 2021-01-12 17:28 GMT   |   Update On 2021-01-12 17:28 GMT
உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பிடித்துள்ள நான்கு பேருமே வேளாண் சட்டத்திற்கு ஆதரவாளர்கள், அவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. அத்துடன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழுவில் உள்ள நான்கு பேரும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக உள்ளவர்கள். அப்படி இருக்கும்போது விவசாயிகள் அவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘விவசாயிகளுக்கு எதிரான  சட்டத்திற்கு எழுத்துப்பூவர்மாக ஆதரவு கொடுத்த நிலையில், அவர்களிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியுமா?. விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெறும் வரை இந்த போராட்டம் தொடரத்தான் செய்யும். ஜெய் ஜவான், ஜெய் கிஷான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுர்ஜிவாலா கூறுகையில் ‘‘தலைமை நீதிபதியிடம் இவர்கள் பெயரை யார் கொடுத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஏன் அவர்களின் நிலை, பின்புலத்தை பார்க்கவில்லை. நான்கு பேரும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானர்கள். மோடியுடன் சாதகமாக நிலைப்பாடு உடையவர்கள். நாம் இவர்கள் இடம் பெற்றுள்ள கமிட்டியிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?’’ என்றார்.
Tags:    

Similar News