தொழில்நுட்பச் செய்திகள்
5ஜி

விரைவில் சென்னையில் 5ஜி வெளியீடு

Published On 2021-12-28 10:03 GMT   |   Update On 2021-12-28 10:03 GMT
இந்தியாவில் சென்னை உள்பட மேலும் சில நகரங்களில் 5ஜி சேவை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியாவில் தற்போது 4ஜி இணைய சேவை வழங்கப்படுகிறது. பல நாடுகளில் 5ஜி சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

5ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் 5ஜி சேவை மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை சென்னை உள்பட 13 நகரங்களில் முதலில் அறிமுகமாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



"அடுத்த ஆண்டு 5ஜி சேவை, சென்னை, அகமதாபாத், டெல்லி, பெங்களூர், சண்டிகர், காந்திநகர், குர்கிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, புனே, மும்பை ஆகிய 13 நகரங்களில் முதலில் வழங்கப்பட இருக்கிறது."

"இந்தியாவில் 5ஜி சேவையை வணிக ரீதியாக எந்த தொலைத் தொடர்பு நிறுவனம் முதலில் வழங்க போகிறது என்பதை மத்திய தொலைத் தொடர்பு துறை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை. தொலைத் தொடர்பு துறை 5ஜி சேவைக்கான சோதனையை நடத்த எட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த சோதனை 2018-ம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைய இருக்கிறது," என மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News