செய்திகள்
கைது

தவளக்குப்பம் அருகே நடந்த விவசாயி கொலையில் 2 வாலிபர்கள் கைது

Published On 2021-09-22 02:41 GMT   |   Update On 2021-09-22 02:41 GMT
தவளக்குப்பம் அருகே நடந்த விவசாயி படுகொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் உடையார் தெருவை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன் (வயது 51). விவசாயி. இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். அனந்தராமனுக்கு அப்பகுதியில் உள்ள இருளர்குடியிருப்பு கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் அனந்தராமன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அனந்தராமனை சரமாரியாக கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இதை அறிந்த அனந்தராமனின் உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டு, கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக அனந்தராமனின் மனைவி தனபாக்கியம் தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது கணவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், பணத்தை தர மறுத்து எங்களிடம் தகராறு செய்து கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், டி.என்.பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சண்முகம் (22), சிவஞானம் மகன் சதீஷ் (21) ஆகியோர் அனந்தராமனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் விசாரணைக்காக அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர். கொலை செய்தது ஏன்?, இதற்கு பின்னால் யாராவது இருக்கிறார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News